`ஸ்டாலின் பேச்சை மதிக்காத உ.பி-க்கள் முதல் காணாமல்போன அண்ணாமலை வரை!' – கழுகார் அப்டேட்ஸ்

நெல்லை மாவட்டத்தில், தி.மு.க-வுக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மேயர் சரவணன் உள்ளிட்டோர் தலைமையில் கட்சியினர் திரண்டு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆனால், அதைப் புறக்கணித்துவிட்டு, முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் தலைமையில் எதிர்த்தரப்பினர் தனியாகச் சென்று மாலை அணிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், இரு தரப்பினரும் மாறி மாறிப் புகார் தெரிவித்தனர். அப்போதே அவர்களைக் கண்டித்த ஸ்டாலின், `இனியாவது இரு தரப்பினரும் இணைந்து செயல்படுங்கள்’ என்று உத்தரவும் பிறப்பித்தார். ஆனாலும், அடுத்த சில தினங்களிலேயே இரு கோஷ்டியினரும் தனித்தனியாக அண்ணாசிலைக்கு மாலை அணிவித்திருப்பது கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.

புதுச்சேரியின் பா.ஜ.க தலைவராக இருக்கும் சாமிநாதனின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாம். இந்த முறையாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற யாரையாவது நியமிக்கலாம் என்று முடிவெடுத்த கட்சித் தலைமை, இரண்டு ஆண்டுகளாகச் சல்லடை போட்டுச் சலித்தும் கட்சிக்குள் அப்படி யாரும் சிக்கவில்லையாம்.

சாமிநாதன்

அதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களை ஹைஜாக் செய்து ஆட்சிக்கு வந்ததுபோல, அங்கிருந்தே தலைவருக்கான தகுதியுள்ள ஆளைத் தூக்கலாமா என்று ஆலோசித்துவருகிறதாம் பா.ஜ.க.

லண்டன் பென்னிகுவிக் சிலை திறப்புக்குச் சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஊர் திரும்பிவிட்டார். ஆனால், “நாங்களும் தேனிக்காரய்ங்கதான்” எனத் துணைக்குச் சென்ற மா.செ-க்கள் தங்கதமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர், “லண்டனை சுற்றிப்பார்த்துவிட்டுதான் வருவோம்” என்று அங்கேயே தங்கிவிட்டார்களாம். இதற்கிடையே விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் தேனியிலிருந்து தி.மு.க-வினர் பெரிய அளவில் பங்கேற்கவில்லை என்று மேலிடத்துக்குப் புகார் பறந்திருக்கிறது.

லண்டனில் பென்னிகுக் சிலை

விசாரித்ததில் “கட்சியினரை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லவேண்டியவர்களே ஊர்சுற்றிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் எதற்குச் செலவு செய்ய வேண்டும்?” என உள்ளூர் நிர்வாகிகள் ஒதுங்கிக்கொண்டதே காரணம் எனத் தெரியவர, செம கடுப்பில் இருக்கிறதாம் தலைமை!

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அண்ணா பிறந்தநாளுக்குள் ஓ.பி.எஸ் தன்னைச் சந்தித்துவிட்டால், அண்ணா பிறந்தநாளை தஞ்சாவூரில் விமரிசையாகக் கொண்டாட முடிவுசெய்திருந்தாராம் சசிகலா. இதற்காக சசிகலா ஆதரவு தொலைக்காட்சி ஆட்கள், சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு தயாராக இருந்தனர்.

ஆனால் சசிகலா எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதனால் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பதைத் தவிர்த்த சசிகலா, தன்னுடைய இல்லத்தில் அண்ணா படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். “அண்ணாசிலைக்குப் போகலாமாம்மா?” என ஆதரவாளர்கள் கேட்டதற்கு, “பிறகு பார்த்துக்கலாம்” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டாராம் சசிகலா.

தமிழ்நாட்டில் தீவிரமாக அரசியல் செய்துவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமீபகாலமாக எங்குமே பார்க்க முடியவில்லை. கேட்டால், ‘வாராணாசியில் இந்துத்துவா அமைப்பினர் சார்பில் ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சி முகாமுக்குச் சென்றிருக்கிறார்’ என்று சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர். அங்கு யோகா, சித்தாந்தம் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறாராம் அவர்.

“இளவயது என்பதால், எல்லாவற்றிலும் ஓவர் ரியாக்ட் செய்து ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். ‘இந்த தியான, சித்தாந்தப் பயிற்சிகளில் அவசியம் கலந்துகொள்ளுங்கள்’ என்று தலைமை சொன்னதாலேயே இந்தப் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டிருக்கிறார்” என்று காதைக் கடிக்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் சந்தித்து 45 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். நிதிஷ் குமார் 2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்கப்போவதாகப் புறப்பட்டிருக்கிறார்.

சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தைக் கைவிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், தேர்தல் ஆலோசனை சொல்லிப் பணமாவது சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் நிதிஷ் குமாரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதோடு 2024-ம் ஆண்டுத் தேர்தலில் இதேபோல நிறைய கட்சிகளுக்கு ஆலோசனை சொல்லும் வேலையில் கிஷோர் ஈடுபடப்போவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

நெல்லையில் கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளபோதிலும், பாறாங்கற்கள், ஜல்லி உள்ளிட்டவை கேரளாவுக்குக் கடத்தப்படுவது தொடர்கிறது. இந்த நிலையில், உவரி-திருவனந்தபுரம் சாலையில் நடைச்சீட்டு உள்ளிட்ட எந்த அனுமதியும் இல்லாமல் வந்த இரு டாரஸ் லாரிகளைப் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.

நெல்லை எம்.பி மகன்

அந்த லாரிகள் நெல்லை எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுடையவை என்பது விசாரணையில் உறுதியாகியிருக்கிறது. வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட, அவர் தலைமறைவாகிவிட்டார். ‘கல்குவாரிகளை எப்போது திறப்பீர்கள்?’ என்று சமீபத்தில் அமைச்சர் முன்னிலையில், கலெக்டரை மிரட்டினாரே அதே ஞானதிரவியத்தின் மகன்தான் இந்த தினகரன். எனவே, `நடவடிக்கை எடுக்குமா அரசு?’ என்று சந்தேகமாகக் கேட்கிறார்கள் மக்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.