சிறுமிக்கு பாலியல் தொல்லை: நீதிபதி விடுமுறையால் தள்ளிப் போகும் தண்டனை!

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல் ஆய்வாளர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவித்த வழக்கில், நீதிபதி விடுமுறை என்பதால் அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவில்லை.

சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வழக்கில் 22பேர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி ராஜலட்சுமி செப்டம்பர் 15ஆம் தேதி அறிவித்தார்.

அதன்படி மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் செப்டம்பர் 19ஆம் தேதியன்று (இன்று) அறிவிப்பதாகவும் நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நீதிபதி ஒரு வாரம் காலம் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே 21 பேர் மீதான தண்டனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.