பிடிஆரின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்க பாஜக திட்டம்… முறியடிப்பாரா ஸ்டாலின்?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தயவில் நான்கு எம்எல்ஏக்களை பெற்று தமிழகத்தில் கால் ஊன்றிவிட்ட பாஜக. அடுத்து எப்படியாவது வேரூன்றி விட வேண்டும் என்ற இலக்கோடு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவது அரசியல்ரீதியாக எதிர்காலத்தில் தமக்கு சாதகமான விஷயமாக கருதும் பாஜக, தற்போது தமக்குள்ள ஒரே எதிரியான ஆளும் திமுகவை கட்சி மற்றும் ஆட்சிரீதியாக வீழ்த்தவோ, பலவீனப்படுத்துவோ தீவிரமாக முயற்சித்து வருகிறது.

கட்சிரீதியாக திமுகவை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்த, வழக்கம்போல் ஹிந்துத்துவா கொள்கையை கையில் எடுத்துள்ள பாஜக, ஆட்சி, நிர்வாகரீதியாக ஸ்டாலினை வீழ்த்த முதல்கட்டமாக ஆறு அமைச்சர்களை கட்டம் கட்டி உள்ளதாம். 2023 புது வருடம் பிறப்பதற்குள் குறிப்பிட்ட ஆறு அமைச்சர்களின் பதவிகளுக்கும் வேட்டு வைப்பதுதான் பாஜகவின் தற்போதைய பிளானாம்.

என்ன காரணம்?:
பாஜகவின் ஹிட் லிஸ்டில் முதலில் இருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை தோற்கடித்தவர் என்ற பழைய பகை ஒருபுறம் இருக்க, பாஜக கொஞ்சம் வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில், திமுக மீண்டும் செல்வாக்கு பெற காரணகர்த்தாவாக இருந்து வருபவர் என்பதால்தான், பாஜகவின் ஹிட் லிஸ்ட் செந்தில் பாலாஜிக்கு முதலிடமாம்.

ஆளுநர்கள் நியமன மசோதா, புதிய கல்விக் கொள்கை போன்ற முக்கிய விஷயங்களில் தடையாக இருப்பதுடன், ஆளுநர் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிதான் காரணம் என்று கருதுவதால் பாஜகவின் அடுத்த குறி இவர் மீது தான் உள்ளதாம்.

ஜிஎஸ்டி, பெட்ரோல் .டீசல் மீதான வரி விதிப்பு போன்ற துறைரீதியான விவகாரங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தைரியமாக வாய்ஸ் கொடுப்பதில் தொடங்கி, அண்மையில் மதுரையில் நடைபெற்ற செருப்பு வீச்சு சம்பவம் வரையிலும், அதன் எதிரொலி பாஜகவில் இருந்த டாக்டர் சரவணனை மீண்டும் திமுகவுக்கு இழுத்தது வரை, தாமரை கட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தவரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பாஜகவின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறாராம்.

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சிஇஓவாக நியமிக்கப்படவிருந்த மணிகண்டன் பூபதியை அந்த பொறுப்புக்கு வரவிடாமல் செய்தது, பாஜகவை நோக்கி வரும் தமிழக இளைஞர்களை, திமுக இளைஞரணியின் பக்கம் இழுப்பது என்ரு பாஜகவுக்கு செம டஃப் கொடுத்துவரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மீதும் செம கடுப்பில் இருக்கிறதாம் தாமரைக் கட்சி.

தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும் ஒரு சில மாவட்டங்களில் முக்கியமானதாக உள்ள கன்னியாகுமரி, தாமரைக்கு தலைவலி கொடுத்துவரும் மனோ தங்கராஜ், சொத்து குவிப்பில் சிக்கித் தவித்துவரும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தமிழக பாஜகவின் ஹிட் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளார்களாம். இந்த ஆறு அமைச்சர்களையும் 2023 புதுவருடம் பிறப்பதற்குள் பதவியில் இருந்து தூக்க திட்டமிட்டுள்ளதாம் தமிழக பாஜக.

எப்படி சாத்தியம்?:
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதேபோன்று 2001-06 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அவரது 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனை பதவியில் தூக்க, உரிய அதிரடி நடவடிக்கை எடு்க்க கோரி ஆளுநர் ரவியிடம் ரிப்போர்ட் செய்துள்ளதாம் தமிழக பாஜக.

இதேபோன்று பிடிஆர், அன்பில் மகேஷ், மனோதங்கராஜ், பொன்முடி ஆகிய அமைச்சர்களின் சொத்து பட்டியல், நிலுவையில் உள்ள வழக்குகள், துறைரீதியான முறைகேடுகள் என இவர்களின் பதவி்க்கு வேட்டு வைக்கும் விதத்தில் உரிய ஆதாரங்களுடன் ஆளுநரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த புகார் பட்டியல் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் புயலை கிளப்ப உள்ளதாக கூறுகின்றன கமலாலய வட்டாரங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.