தனியார் நிறுவனத்தை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது நடவடிக்கை! கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது என குற்றம் சாட்டி உள்ளர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் இடத்தை காலி செய்வது தொடர்பாக, அந்த நிறுவனத்தக்கு  உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக,  அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சி தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மீது தமிழகஅரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இந்த நிறுவனத்தை,  முன்னாள் எம்எல்ஏ மூர்த்தியும் மிரட்டி இருந்தார்.  திமுகவினர் நேரடியாக மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து,  மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத் துக்குச் சென்ற திமுக தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

பொறுப்புமிக்க சட்டப் பேரவை உறுப்பினர், தனியார் நில குத்தகை விவகாரத்தில் பஞ்சாயத்து பேசச்சென்றதும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை மிரட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்தாலும், திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்துகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.