புதுச்சேரி: “எங்களுக்கு அநீதி இழைக்கிறார்!”–முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டு ஆட்சி கடந்திருக்கும் நிலையில், முதல்வர் ரங்கசாமியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். புதுச்சேரி சட்டப்பேரவையில் 6 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் உள்ளிட்டவர்கள் பா.ஜ.க-வுக்கும், நேரு, பிரகாஷ்குமார், பி.ஆர்.சிவா போன்றவர்கள் என்.ஆர்.காங்கிரஸுக்கும் ஆதரவளித்து வருகின்றனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் அவர்களுக்கு ஆதரவளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்துவரும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான அங்காளன், சட்டப்பேரவை வாயிற்படியில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சட்டப்பேரவைக்கு வந்த காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான கல்யாணசுந்தரமும் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் அமர்ந்தார்.

உண்ணாவிரதத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ அங்காளன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ அங்காளன், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் தொகுதியில் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. பல இடங்களில் குடிநீர் வசதி வேண்டும் என்று கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும் அங்கு மோட்டார் வழங்காததால், குடிநீர் வழங்கப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு பணிகள்கூட நடக்கவில்லை. வளர்ச்சிப்பணிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தடையாக உள்ளார்.

பா.ஜ.க-வுக்கு அளித்துவரும் ஆதரவை நான் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு கமிட்டி போன்ற நியமனங்களில்கூட என் பரிந்துரைகளை கேட்கவில்லை. இப்படி பல விஷயங்களில் முதலமைச்சர் என்னை அசிங்கப்படுத்தியும், அவமானப்படுத்தியும் வருகிறார். புதுச்சேரியில் பா.ஜ.க வளரக்கூடாது என அவர் நினைக்கிறார். நான் பா.ஜ.க-விலிருந்து வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அவரின் அறையிலேயே பேசியுள்ளார்.

எனவே முதலமைச்சரை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன். முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும், புதுவையில் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும். இ-டெண்டர் முறை இருக்கும்போது, வெளிப்படைத்தன்மை இல்லாமல் மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியுள்ளனர். மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.

இது குறித்துப் பேச பா.ஜ.க கட்சித் தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். அவரை சந்திக்கும்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக இருக்கும்.  புதுச்சேரியில் பா.ஜக ஆட்சி வரவேண்டும். அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க ஆட்சி வர வேண்டும் என விரும்புகின்றனர்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், “தன்னை சுற்றி சில ஆட்களை வைத்துக்கொண்டு, அவர்கள் பேசுவதை மட்டும் முதலமைச்சர் ரங்கசாமி கேட்டு வருகிறார்.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் முதல்வர் செயல்படக்கூடாது. எனது காலாப்பட்டு தொகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையம், கோயில், குடியிருப்பு உள்ள பகுதியில் மதுபான கடைக்கு அனுமதி வழங்கியுள்ளார். அங்கு மதுபான கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என நான் கோரிக்கை வைத்ததையும் மீறி முதல்வர் அனுமதியளித்துள்ளார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொன்னதன் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்து போட்டு அவரை முதல்வராக்கினோம். ஆனால் அவர் முதல்வரான பிறகு எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறார். ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது.

அதற்குள் எங்களுக்கு இவ்வளவு அநீதி நடக்கிறது. முதல்வர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனாம் தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் கிடையாது. ஆனால் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இந்த அரசு அலுவலகம் கொடுத்திருக்கிறது. அப்படியென்றால் இது என்ன அரசு? எம்.எல்.ஏ-வுக்கே கொலை முயற்சி நடக்கிறது. முதலமைச்சர் என்பவர்  அனைத்து எம்.எல்.ஏ-க்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைதான் எழும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.