7வது திருமணம் செய்ய வந்த பெண்! 6வது கணவனால் மடக்கி பிடிப்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ம்  தேதி திருமணம் நடந்தது.  திருமணத்தை மதுரையை சேர்ந்த பாலமுருகன் (45) என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா மற்றும் மாமா ஆகிய இருவர் மட்டுமே வந்துள்ளனர்,  அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு சென்றனர்.  தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார், 9ம் தேதி காலை தனபால் எழுந்து பார்த்தபோது மனைவி சந்தியாவை காணவில்லை, அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது,  அவரது உறவினர்கள் புரோக்கர் பாலமுருகன் மொபைல் ஃபோன்களும் சுவிட்ச் ஆப்பில் இருந்தன. 

வீட்டில் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டு புடவை, நகைகள் மேலும் சந்தியா கொண்டு வந்த துணிகளை எடுத்துக்கொண்டு மாயமானது தெரிய வந்தது.   இது குறித்து தனபால் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது மதுரை சேர்ந்த தனலட்சுமி என்ற புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.  இதை பார்த்த தனபால் தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார்.  இதனையடுத்து புரோக்கர் தனலட்சுமியிடம் உறவினர்கள் மூலம் வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசியுள்ளார், போட்டோக்களை மட்டும் பார்த்து போனியிலேயே திருமணம் நிச்சயம் செய்து நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் ஐயப்பன் ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தனர், காரை ஜெயவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.  அனைவரும் மதுரையை சேர்ந்தவர்கள் 7வது திருமணம் செய்து மோசடி செய்யும் நோக்கில் வந்த மணப்பெண் சந்தியா அங்கு 6வது கணவர் தனபாலும், அவரது உறவினர்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  சந்தியாவையும் அவருடன் வந்தவர்களையும் பிடித்து பரமத்தி வேலூர் போலீசில் தனபால் மற்றும் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்ந்து சேர்த்து 6 வது திருமணம் நடந்தது தெரியவந்தது.  யாரையாவது திருமணம் செய்து 2 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்றுக் கொண்டு கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் சந்தியா உள்ளிட்டவர்கள் என்பது தெரியவந்தது.  இதனை அடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, ஐயப்பன், ஜெயவேல் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.