அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு – ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு…

சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அன்று, ஓபிஎஸ் தனது ஆதரவளர்களுடன் வந்து அதிமுக தலைமை அலுவலக அறைகளின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அவணங்களை அள்ளிச்சென்றால். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அதிமுக அலுவலக கலவரதின்போது திருடப்பட்ட 113 ஆவணங்களை மீட்டுள்ளதுடன், இதுதொடர்பாக ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக எடப்பாடிக்கு நீதிமன்றம் வழங்கிய  அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் ஜூலை 11ந்தேதி   அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த  கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டனர்.

இதனிடையே, அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ்  தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கு பூட்டப்பட்டிருந்த அறைகளை கடப்பாரை கொண்டு உடைத்து, அலுவலகத்திற்குள் சென்றதுடன், அங்கிருந்த அதிமுக ஆவணங்களை தனது வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியதுடன், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டன. இந்த சம்பவங்கள் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து தமிழகஅரசு வருவாய் துறையினர்  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். ஆனால், நீதிமன்ற வழக்கின்போது, காவல்துறையி கடுமையாக சாடிய நீதிபதி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற எடப்பாடி ஆதரவாளர்கள் அலுவலகம் சூறையப்பட்டு அவணங்கள் அள்ளிச்சென்றதாக  ஓபிஎஸ் தரப்பினர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள மனுவில், 300 ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு தரும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது,  அதிமுக அலுவலக கலவரத்தின்போத திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளதாக  சிபிசிஐடி தெரிவித்து உள்ளனர். அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.