எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு ஏன்?-ராகுல் காந்தி விமர்சனம்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு அதிக அளவில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நாட்டிலுள்ள இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் காந்தி இன்று கூடலூரில் மேற்கொண்டார். கோழிப்பாலம் பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணமாக வந்து கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்கள் மத்தியில் பேசினார். ராகுல் காந்தி நடை பயணமாக வந்த பாதைகளில் இருபுறம் கூடியிருந்த மக்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீடு அதிக அளவில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆளுநர்கள் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என மக்கள் முன்னிலையில் கேள்வியை முன்வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு தொல்லை கொடுக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன உரிமை உள்ளது என கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதா அரசு நாட்டில் வன்முறையை வளர்த்து மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இதனை தடுக்க தான் இந்தியா ஒற்றுமை பயணம் நடைபெறுவதாக ராகுல் காந்தி கூறினார்.
image
மத்திய அரசு கொண்டுவந்துள்ள பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவைகள் நாட்டில் உள்ள இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாக பேசினார். ஜிஎஸ்டியால் இன்று சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக தன்னிடம் சிறுகுறு தொழில் நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டதாக ராகுல் காந்தி பேசினார்.
மாநிலத்தின் ஜிஎஸ்டி தொகையை எடுத்துக் கொள்ள மத்திய அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், இது உங்களது பணம் என்று எனவும் அதை குறித்து நேரத்தில் உங்களுக்கு திருப்பித் தர வேண்டும் எனவும் அவர் மக்கள் மத்தியில் பேசினார். இந்தியாவில் தற்சமயம் வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்திருப்பதாகவும், விலைவாசி பெரும் உயர்வை கண்டிருப்பதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.