மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பிஎஃப்ஐ, 8 துணை அமைப்புகளுக்கு தமிழக அரசும் தடை விதித்தது

சென்னை: மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை மேற்கொண்டது. இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து அந்த அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

தொடர்ந்து, 2-வது முறையாக கடந்த 27-ம் தேதி 8 மாநிலங்களில் சோதனை நடத்தி, 247 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில், பிஎஃப்ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், பிஎஃப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அனைத்து இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), நேஷனல் கன்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனை சேஷன் (என்சிஎச்ஆர்ஓ), நேஷனல் விமன்ஸ் ஃப்ரன்ட், ஜூனியர் ஃபிரன்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் ஃபவுண்டேஷன் (கேரளா) ஆகியவற்றை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்து, இது தொடர்பான அறிவிக்கையை கடந்த 28-ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவைப் பிறப்பிக்கவும், மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அரசின் அதிகாரத்தைச் செயல்படுத்துவது அவசியம் என தமிழக அரசு கருதுகிறது.

எனவே, உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அறிவிப்பின்படி, மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக தமிழக அரசு அறிவிக்கிறது. இந்த அதிகாரத்தை, தமிழகத்தில் உள்ள காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்தலாம். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.