நவீன வசதிகளுடன் உள்நாட்டில் தயாரான இலகு ரக ஹெலிகாப்டர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: விமானப்படையின் பலம் அதிகரிக்கும்

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் வாங்க ஒன்றிய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கற்று இலகு ரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் கூறுகையில், \”இந்த புதிய ஹெலிகாப்டர்களை உருவாக்கியதன் மூலம் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன் என்ன என்பதை உலக நாடுகளுக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம்\” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி விஆர். சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இலகு ரக ஹெலிகாப்டர்களுக்கு ஜோத்பூர்  விமானப்படை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாரம்பரிய முறைப்படி  வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மத வழிபாட்டுடன் அவை  நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இலகு ரக ஹெலிகாப்டர் வகையில் முதல் முறையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டருக்கு பிரசந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிறப்புகள் என்ன?
* இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் 5.8 டன் எடை, இரட்டை இன்ஜின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இதன் வேகம் மணிக்கு 268 கி.மீ. அதிகபட்சமாக 550 கி.மீ வரை பயணிக்கும்.
* இதன் சிறப்பு அம்சமே, இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்பதுதான்.
* வான்வழி தாக்கும் ஏவுகணைகள், 20 எம்எம். துப்பாக்கிகள், ராக்கெட் சிஸ்டம் உள்பட அதிநவீன ஆயுதங்களை இந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏவ முடியும்.
* தற்போது சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், சியாச்சின், லடாக் உள்ளிட்ட உயரமான மலை பகுதிகளில் உள்ள எதிரிகளின் பதுங்கு குழிகள், ராணுவ முகாம்கள், டாங்கிகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். இதற்கு ஏற்றாற் போல் இந்த ஹெலிகாப்டர்கள் அதிக உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்த புதிய ஹெலிகாப்டர்களை தயாரித்ததன் மூலம், வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.