மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் 2022 அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் 9ஆம் வகுப்பில் பள்ளிப் படிப்பை தொடர முடியும். மேலும் மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும் பள்ளி மாணவர்களும் 10 மற்றும் 12 வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடர முடியும். ஆண்டுக்கு உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது தொடர்பாக வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இந்த திட்டம் நூறுசதவீதம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியான மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் 7ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.