ராஜராஜ சோழன் இந்து இல்லையா?… வெற்றிமாறனுக்கு எதிராக வாள் சுழற்றும் வானதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் மணிவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்துவாக்கிவிட்டார்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆனால் அவர் அப்படி எதுவும் கூறவில்லை அவரது பேச்சு திரிக்கப்பட்டிருப்பதாக வெற்றிமாறன் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதெசமயம் வெற்றிமாறன் அப்படி பேசியது கண்டனத்திற்குரியது என குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

அந்தவகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெற்றிமாறனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கிறது” என்று வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சையில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். அவருக்கு, ‘சிவபாத சேகரன்’, ‘சோழ நாராயணன்’, ‘திருமுறை கண்ட சோழன்’, ‘உலகளந்தான்’ என்று பல பெயர்கள் உண்டு. இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று உலகின் பல நாடுகளில், சிவலிங்க வழிபாடு வருவதற்கு சோழ அரசர்களே காரணம். சோழ மன்னர்கள் அரசாண்ட இடங்களில் எல்லாம், சிவபெருமானுக்கு மிகப்பெரும் ஆலயத்தை அமைத்தார்கள். கம்போடியாவிலுள்ள இந்து ஆலயம் தான் உலகத்திலேயே மிகப்பெரிய இந்து ஆலயம்.

அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சிதான் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று சொல்லவும் இப்போது துணிந்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க, ராஜராஜ சோழன் போன்ற சோழ, சேர, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.