8 ஆண்டுகள் காத்திருப்பு: அம்மா ஆகும் சரவணன் – மீனாட்சி ‘ஸ்ரீஜா’!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுர தொடரின் மூலம் அறிமுகமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா, இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அதே சேனலில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற தொடரின் மூலம் அனைவரின் கவனங்களையும் ஈர்த்தனர்.  சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்கள் வந்தபோதிலும் முதல் சீசன் தான் பலரின் மனங்களை வென்றது, இந்த சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் பலரது மொபைல் ரிங்க்டோன் ‘ஏலோ’ என தொடங்கும் ஹம்மிங் தான் இடம்பெற்றிருந்தது.  மண்மணம் மாறாமல் எடுக்கப்பட்ட இந்த சீரியல் இன்றுவரை பலரது ஃபேவரைட் லிஸ்டில் முதலிடம் வகிக்கிறது.  இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது ஜோடி சேர்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

 

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர்.  திருமணமாகி சில வருடங்கள் கழித்து மீண்டும் இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடரில் நடித்து வந்தனர், அதன்பின்னர் ஒரு வெப் சீரிஸிலும் நடித்தனர், இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அடிக்கடி அதில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இடைவினையாற்றி வருகின்றனர்.  திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது ஒன்று தான் மகிழ்ச்சியாக இருந்த இந்த ஜோடிக்கு மன வருத்தத்தை தருவதாகவே இருந்து வந்தது.

இனிமேல் இந்த ஜோடிக்கு அந்த கவலையில்லை, திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கிறார்.  ஸ்ரீஜாவுக்கு வளைகாப்பு போட்ட புகைப்படத்தை செந்தில் மகிழ்ச்சியாக அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது ஃபேவரைட் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.