17ம் தேதி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு; காங்கிரசை பலப்படுத்த பல ‘ஐடியா’ இருக்கு! வாக்காளர்களிடம் சசிதரூர் வீடியோ மூலம் ஓட்டு சேகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல யோசனைகள் இருப்பதாகவும், வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்கும்படியும் வேட்பாளர் சசிதரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களிடம் (கட்சிப் பிரதிநிதிகள்) ஓட்டு சேகரிக்கும் வகையில், சசி தரூர் வெளியிட்டுள்ள 38 வினாடிகள் வீடியோ பதிவில், ‘வரும் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். 2024ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. வேறு எந்த கட்சியாலும் செய்ய முடியாததை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. ஜனநாயக முறையில் தலைவரை தேர்வு செய்கிறோம். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியை பலப்படுத்தும் வகையில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த எங்களிடம் பல யோசனைகள் இருக்கின்றன. கட்சி நிர்வாகத்தைப் பரவலாக்குதல், கட்சியில் தொண்டர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துதல், தொண்டர்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை அதில் அடங்கும். கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல் காலங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பின், நாம் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதும், அரசியலமைப்பு நிறுவனங்களைப் பாதுகாப்பதும்தான் எங்களின் நோக்கமாக இருக்கும். வலுவான காங்கிரசை உருவாக்கினால்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.