ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா… உக்ரைனுக்கு வந்ததே கோபம்- இப்படி பண்ணிட்டாங்களே!

சர்வதேச அரசியல் களத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஷ்யா படைக்கு புதிய தளபதி, கிரீமியா பாலம் மீது தாக்குதல், உக்ரைன் மீது 75 ஏவுகணைகளை விட்டு ரஷ்யா நடத்திய தாக்குதல் என நிலவரம் கலவரமான சூழலில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு சொந்தமான 4 மாகாணங்களை தங்களுடன் இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்ததற்கு சர்வதேச அளவில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுபற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஐ.நாவிற்கான உக்ரைன் தூதர் செர்ஜி கைஸ்லைட்சியா, ரஷ்யா தான் ஒரு பயங்கரவாத நாடு என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது என்று ஆக்ரோஷமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

மேலும் பேசுகையில், இப்படியொரு சர்வாதிகார தலைமை இருக்கும் வரையில் அமைதியையோ அல்லது போர் நிறுத்தத்தையோ என எதையும் எதிர்பார்க்க முடியாது. எங்கள் மீதான தொடர் தாக்குதல்களில் 14 பேர் பலியாகியுள்ளனர். 97 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்யா வீசிய கொடூர ஆயுதம்; கண்ணீரில் மிதக்கும் உக்ரைன்!

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஐ.நாவிற்கான ரஷ்ய பிரதிநிதி வசிலி நெபென்ஸ்யா, கிழக்கு உக்ரைனில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் இதை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை. அவர்கள் என்ன மொழியை பேச வேண்டும்.

தங்கள் பிள்ளைகளுக்கு என்ன மொழியை கற்று தர வேண்டும் என்பதில் அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறினார். பின்னர் பேசிய ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸ், ரஷ்யாவின் தாக்குதலை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய அதிபர் புடின் முறைகேடான வகையில் போர் புரிந்து வருகிறார். இது மிக மிகக் கொடூரமான நிகழ்வு. இதை ஏற்கவே முடியாது. உக்ரைன் பக்கம் நாங்கள் நிற்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.