`மகிழ்ச்சி’ – புதிய சின்னம், கட்சி பெயர் ஒதுக்கீட்டில் தாக்கரே, ஷிண்டே அணியினர் திருப்தி!

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்ததால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஜூன் மாதம் கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் துணையோடு முதல்வராகி இருக்கிறார். சிவசேனாவிற்கும், கட்சி சின்னத்திற்கும் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு பேரும் உரிமை கொண்டாடி வந்தனர். ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருந்தார். இம்மனு நிலுவையில் இருந்து வந்தது.

இதனிடையே மும்பையில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சின்னம் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சிவசேனாவின் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனிடம் கடந்த 4ம் தேதி கடிதம் கொடுத்தார். உடனே இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயிடமும் பதில் பெற்றுக்கொண்டு சிவசேனாவின் சின்னமான வில் அம்புவை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்து புதிய சின்னம், கட்சி பெயர்கள் தொடர்பாக தலா 3 பெயர்களை தெரிவிக்கும்படி இரு தரப்பினரிடமும் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் பதில் கொடுத்தனர்.

ஷிண்டே

அதனை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன் உத்தவ் தாக்கரே கேட்ட திரிசூலம், உதயசூரியன் சின்னங்களை கொடுக்க மறுத்துவிட்டது. ஒளிரும் டார்ச் லைட் தேர்தல் சின்னம் உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி பெயராக சிவசேனா உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு பாலாசாஹேப் சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே கேட்ட தேர்தல் சின்னங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு சின்னங்களின் பெயர்களை தெரிவிக்கும்படி ஏக்நாத் ஷிண்டேயிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. மதங்களோடு தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்குவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கமிஷன் ஒதுக்கிய சின்னம் மற்றும் கட்சியின் பெயரில் தங்களுக்கு மகிழ்ச்சியே என்று உத்தவ் தாக்கரே அணியினர் தெரிவித்துள்ளனர். அந்த அணியின் முன்னாள் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் இது குறித்து கூறுகையில், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்சியோடு மூன்று பெயர்களும் சேர்ந்திருப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே அணியினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்சி பெயர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து அக்கட்சியின் மூத்த அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “எங்களுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள பெயரின் மூலம் எங்களை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்துள்ளது. தேர்தல் சின்னம் தொடர்பாக இன்று முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே மும்பை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் உத்தவ் தாக்கரே அணி போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே அணிக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கொடுத்திருக்கிறது. இதனால் இத்தேர்தலில் பாஜக வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. உத்தவ் தாக்கரேயிக்கும் இந்த தேர்தல் கவுரவப்பிரச்னையாகி இருப்பதால் இதில் எப்படியும் வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.