“அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தால்… அநாதையாக போவார்கள்" – சாபம் விட்ட சி.வி.சண்முகம்!

அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்த விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமையேற்று பேசிய விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்,  “அதிமுக-வின் அதிகபட்ச பதவி, கட்சியின் தலைவர் பதவி. தமிழகத்தில் உச்சபட்ச பதவி, முதலமைச்சர் பதவி. இவை இரண்டையும் ஆண்டு அனுபவித்த ஒருவர்… இன்றைக்கு இந்த இயக்கத்தை கூண்டோடு அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

சி.வி.சண்முகம் – விழுப்புரம்

1972-ல் யாரை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது? கருணாநிதி எனும் தீய சக்தியை அழிக்க வேண்டும். அந்த குடும்பத்தை நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க. அம்மா, இன்று நம்மோடு இருந்திருப்பார்கள். அவர்கள் இல்லாமல் போவதற்குக் காரணமான தி.மு.க-வின் கருணாநிதி, ஸ்டாலினோடு நேரடி உறவை வைத்துக்கொண்டு… அ.தி.மு.க-வின் வேட்டியை கட்டிக்கொண்டு… நான்தான் அதிமுக, நான்தான் அதிமுக தலைவர் என சொல்லிக்கொண்டு… திமுக-வுடன் இணைந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, யாரெல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு… தானும், தன் குடும்பம் மட்டும் தான் பிழைக்க வேண்டும், மீதி யாரும் நல்லாயிருக்க கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அதிமுக இயக்கத்தை அழிப்பதற்காக கிளம்பியிருக்கிறார்.  எம்.ஜி.ஆர் இருக்கும்போதே இந்த இயக்கம் துரோகிகளை  பார்த்துவிட்டது. நாஞ்சில் மனோகரனில் இருந்து… இன்று திமுக-வில் இருந்து ராஜினாமா செய்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வரை அதிமுக-விலிருந்து போனவர்கள் தான். சுப்புலட்சுமி, 1977-ல் நம் தலைவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் தோல்வியடைந்த பின், முதலில் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் நாஞ்சில் மனோகரனும், சுப்புலட்சுமி ஜெகதீசனும் தான். இந்த இயக்கத்திலிருந்து போன முதல் கருங்காலிகள். அதன் பின், எஸ்.டி.சோமசுந்தரம் போனார்.

அவர் சொல்கிறார், “தொண்டர்கள் என் பக்கம்” என்று. ஒருவேளை திமுக தொண்டர்களை சொல்கிறாரா என்று தெரியவில்லை.

ஓ.பி.எஸ், ஸ்டாலின்

அதேபோலத்தான் எஸ்.டி.எஸூம் சொன்னார். அவராவது பரவாயில்லை, நாலு பேருக்கு நல்லது செய்திருக்கிறார். அவரால் பலபேர் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி கூட ஆகியிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரியும், மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அந்த நான்கு பேர் தன்னுடன் இருப்பதாலே கட்சி தனக்கே சொந்தம் என மாய கணக்கு போட்டார். ஆனால், கடைசியில் அவருடைய சாவில் 50 பேர் கூட இல்லை. நல்ல தலைவர், அதிமுக-விற்காக உழைத்தவர் அவர்.  ஆனால் கடைசியில் அவருடைய நிலைமை என்ன? அதிமுக-விற்கு துரோகம் இழைப்பவர்கள் நிலை, கடைசியில் இப்படித்தான் ஆகும். அதிமுக-விற்கு துரோகம் இழைப்பவர்கள்… கடைசியில் அநாதையாக தான் போவார்கள்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.