சீரற்ற காலநிலை: 55 ஆயிரத்து 435 பேர் பாதிப்பு – மூவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையினால் 13 ஆயிரத்து 902 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை அறிவித்துள்ளது.

மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேல் மாகாணத்திலேயெ அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார்.

இதேவேளை வரகாபொல மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வராக்காபொல பொலிசார் தெரிவித்தனர்.
மண்சரிவில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மகனுடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இந்தப் பெண்ணின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டை அண்மித்து காணப்படும் பல வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன்இ 15 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலை இன்னும் இரண்டு தினங்களுக்கு தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 அத்தனகலுஓயா, களனி கங்கை, களு கங்கை உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பகுதிகளில் சிறியளவான வெள்ள எச்சரிக்கை நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மழையுடன்கூடிய காலநிலை தொடருமாயின் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. களனி கங்கையின் தாழ்நில பிரதேசங்களிலும வெள்ள அபாயம் நிலவுகிறது. களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதினால் தியகம பொலிஸ் பிரிவுக்குட்ட வீதிகள் சில நீரில் மூழ்கியுள்ளன.

மல்வாணை யபரெலுவ வடக்கு, யபரெலுவ தெற்கு, தியகம கிழக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 682 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தியகம – களனி வீதியின் பண்டாரவத்த சந்தியில் இருந்து ரக்கஹவத்தை பாலம் வரையான பகுதியும் பண்டாரவத்த சந்தியில் இருந்து மல்வாணை முச்சந்தி வரையும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை கையாளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.