ஸ்டாலின் அஞ்சும் அளவுக்கு தமிழக பாஜக வளர்கிறதா? – அண்ணாமலை கருத்தும் நிலவரமும்!

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, “சமீபத்தில் திமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதை நாம் கேட்டோம். பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லவே இல்லை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய ஸ்டாலின், இன்று பாஜக தங்களது முதல் எதிரியாக அவராகவே அறைகூவல் விடுத்துள்ளார். அதை பார்க்கும்போதே பாஜக தமிழகத்தில், தமிழக மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்வர் பாஜக-வை தாக்கி பேசியிருக்கிறார். ஏதாவது ஒன்றை செய்து 2024-ல் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பேசியிருக்கிறார்.

ஸ்டாலின்

தமிழக பாஜக மூத்த தலைவர்கள், என்னிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் முதல்வரின் பேச்சு பாஜக-வை சுற்றியே இருந்ததாக தெரிவித்தனர். அதை பார்க்கும்போது அவருக்கு எந்தளவுக்கு பயம் தொற்றியுள்ளது என்பது புரிகிறது. முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறார். இரண்டாவது பயம் பாஜக-வின் வளர்ச்சி. இந்த இரண்டும் சேர்ந்து முதல்வருக்கு தூக்கத்தைக் கெடுக்கின்றது என்று அவர் சொல்லியிருப்பதாக செய்தியை நான் அறிந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தி.மு.க செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, “அண்ணாமலையின் கேள்விகளுக்கு பதில் சொல்வதையே தரைகுறைவாக நினைக்கிறேன். தகுதியான கேள்விக்கு, தகுதியான ஆள்களுக்கு, கொள்கை திறன் உள்ள ஆள்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்கும். ஏதும் இல்லாமல் மற்றவர்கள் மீது அவதூறு சேற்றை வாரி இறைக்க கூடிய நபருக்காக பதில் பேசுவதே நேரத்தை வீணடிப்பதாக கருதுகிறேன்”என்கிறார்.

தமிழன் பிரசன்னா

“பா.ஜ.க-வை கண்டு ஸ்டாலின் அஞ்சுவதாக தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை பா.ஜ.க தன் பலத்தை தேர்தல் மூலமாக காட்டவில்லையே” என்கிற மூத்த பத்திரிகையாளர் பிரியன், மேலும் தொடர்ந்தார், “2016-ல் தனியாக நின்ற போது மூன்று சதவீதம் ஓட்டு வாங்கினார்கள். அதன் பின் கூட்டணியில்தானே நின்றார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கடைசியாக நின்று ஆறரை சதவீதம் வாங்கினார்கள். அதிலும் சில பகுதிகளில்தான். எனவே வாக்கு வங்கியில் இன்னும் நிரூபிக்காதவரை எதற்காக ஸ்டாலின் அஞ்ச வேண்டும். கிட்டத்தட்ட முப்பெத்தெட்டு சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கும் திமுக, உள்ளாட்சித் தேர்தலில் ஆறரை சதவீதம் வாக்கு வாங்கியிருக்கும் பாஜக-வை பார்த்து ஏன் அஞ்ச வேண்டும்.

ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது, மத்தியில் ஆட்சி செய்வதால் பல்வேறு வழிகளில் ஒரு கட்சியை வீழ்த்துவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாஜக கீழ் இறங்கி போவார்கள் என்பதைதான் சுட்டிக் காட்டியிருக்கிறார். எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக பல புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது என்கிற அர்த்தத்தில் சொல்லி இருப்பதோடு, இந்துத்துவா பிரசாரங்களையும் பா.ஜ.க முன்னெடுக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஆன்மீகத்தையும், அரசியலையும் தனித்தனியாக பிரித்து பார்க்க கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார். இதோடு அதிமுக பிரிந்திருப்பதால் அதைவைத்து பாஜக அரசியல் செய்கிறார்கள், என்று மூன்று இடத்தில்தான் பா.ஜ.க-வை பற்றி பேசினார். ஒன்றரை மணி நேரம் பேசவில்லை.

பிரியன்

2014-ஆம் ஆண்டிலிருந்து புலனாய்வு அமைப்புகள் கொண்டு இந்திய முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் 124 பேர் மீது ரெய்டு, கேஸ் நடத்தியது பாஜக. அக்கட்சி தலைவர்கள் இதுவரை 6 பேர்தான் இதில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால், பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஊழல் இல்லாமல் இல்லை. மத்தியபிரதேசத்தில் சத்துணவில் ஊழல், அயோத்தியில் நிலம் எடுக்க ஊழல், குஜராத்தில் பல ஊழல்களோடு போதை பொருள்கள் எடுப்பது அதிகமாக இருக்கிறது. அங்கெல்லாம் எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் போகவில்லை. எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்க இந்த அமைப்புகளை பயன்படுத்துவதைதான் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்கத்தில் பாஜகவினர் தான் வளர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அதிமுக பிரிந்திருப்பதால் பல பிரசினைகளை பாஜக கையில் எடுக்கிறார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்க கூடிய பாமக, திமுக-வை எதிர்க்காமல், ஒரு வேண்டுகோள் மாதிரிதான் வைக்கிறார்கள். அதிமுகவும்- மத்திய அரசிடம் அதே போக்கைதான் கடைப்பிடிக்கிறது. அக்கட்சி பிரிந்திருப்பதால் மாநில அரசை எதிர்த்தாலும் அதன் குரல் வலுவாக ஒலிக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

திமுக-வுக்கு எதிராக மதம் சம்பந்தமான பிரசாரங்களை அதிமுக-வை விட பாஜக முன்னெடுப்பது சுலபம். அதனால் பாஜக-வின் சத்தம் அதிகமாக கேட்கிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் ஆ.ராசா பேசியதற்கு பாஜக முன்னெடுத்தது போல் அதிமுக-வால் செயல்பட முடியாது. வெற்றிமாறன் பேசிய விஷயத்தையும் பாஜக கையில் எடுத்துகொண்டு திமுக-வுக்கு எதிராகதான் கொண்டு போகிறார்கள். கிடைக்கும் எல்லா சம்பவங்களையும் திமுக-வுக்கு எதிராக கொண்டு போகும் வாய்ப்பு இருப்பதினாலும், மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் ஊடகங்களும் அதிகமான இடங்கள் கொடுப்பதினாலும், சமூக வலைத்தளங்களில் பாஜக பலமாக இருப்பதினாலும் அவர்கள் சத்தம் அதிகமாக இருக்கிறது. எனவே வளர்ந்திருப்பது போல் ஒரு மாயை தோற்றத்தை கொடுக்கிறது. ஆனால், உண்மையில் வளர்ந்திருக்கிறதா என்பது வருகின்ற தேர்தலில் தனித்து நின்றால்தான் தெரியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.