தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் எல்.இ.டி டிவி திருட்டு! – கொள்ளையர்களின் இலக்கு முக்கிய ஆவணங்களா?

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓ‌.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு ​​உள்ளது.​ ​பெரியகுளம், தென்கரை அக்ரஹார தெருவில் இரண்டு வீடுகள், போடி​யி​ல் ​எம்.எல்.ஏ., ​அலுவலகம் உள்ள​து. இருப்பினும் ​கைலாசபட்டி பண்ணை வீட்​டில் ​தனது ஆதரவாளர்களை​ ​சந்திப்பதையே ஓ.பி.எஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஓபிஎஸ்

​கைலாசநாதர் கோயில் மலைச் சாலை​யை ஒட்டி​​ ​வயல்வெளிகளுக்கு நடுவே​, தனது தென்னந்தோப்பிற்கு அரு​கே 4 ஏக்கர் நிலத்துக்குள் பண்ணை வீ​ட்டைக் கட்டியுள்ளார். நான்கு ஏக்கரை சுற்றியும் 10​ ​அடி உயர​ மதில் சுவர் கட்டி, ​உள்ளே ​பசு மாடுகள் வளர்ப்பு மற்றும் வேளாண் இடு பொருள்கள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்​தி வருகிறார். இங்கு காவலுக்கு நாய்களும், பாதுகாவலர்களும் உள்ளனர். 

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஆதரவாளர்க​ள் சந்திப்பின் போது மட்டுமே வெளியாட்கள் உள்ளே வருவதற்கு அனுமதி உண்டு. அதுவும் பாதுகாப்பு பணியில்​ இருக்கும் போலீஸார் பரிசோதனைக்குப் பிறகே எல்லோரும் உள்ளே செல்ல முடியும். இரண்டு அறைகள் கொண்ட பண்ணை வீட்டின் ஒரு அறையில் பார்வையாளர்களும், மற்றொரு அறையில் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து வரும் ஓ.பி.எஸ், மேல் மாடியில் உள்ள அறையை ஓய்வு அறையாக பயன்படுத்தி வருகின்றார்.​ அந்த ஏசி அறையில் கட்டில் மெத்தை​, 47 இன்ச் டிவி, ஒரு இரும்பு பீரோ மட்டுமே இருந்தன. 

உடைக்கப்பட்ட கதவு பூட்டு

​இந்நிலையில் ​நேற்று காலை பாதுகாவலர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மாடி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அங்கிருந்த 54​ ​இன்ச் எல்.இ.டி., டிவியை​யும், சாமி படங்களுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபாய்​ பணத்தையும் திருடிச் சென்றதாக ​பண்ணையின் மேலாளர் சிவனேசன் போலீஸாரிடம் புகார் அளி​த்தார். ​அதனடிப்படையில், தென்கரை ​போலீஸார் வழக்கு பதிவுசெய்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் பண்ணை வீட்டில் ​விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்தோம். “ஒருவன் வெளியே நிற்க பத்து அடி மதில் சுவரை ஏறி மற்றொருவன் உள்ளே குதித்து திருடிச் சென்றுள்ளதாகக் கூறுவதை நம்பமுடியவில்லை. அதிமுக-வில் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியை கைப்பற்றுவதற்கு ஆதரவாளர்களுக்கு பெரும் தொகை கைமாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுதொடர்பான ஆவணங்களும், கட்சி தொடர்பான ஆவணங்களும் பெரியகுளம் வீட்டில் இருந்துள்ளது.

பீரோ

இந்த ஆவணங்கள் தனது மனைவி ஓராண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியின்போது பண்ணைவீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொடநாடு வழக்கில் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறுவதைப் போல, ஓபிஎஸ் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் பண்ணை வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை ​என்பதும் காவலாளிகள், நாய்கள் இருந்தும் திருட்டு நடந்துள்ளதாகக் கூறுவதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.