பாகிஸ்தான் அரசு மருத்துவமனை கூரையில் 200 உடல்கள் கண்டெடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூரையில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. லாகூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் முல்தான் பகுதியில் நிஷ்டர் மருத்துவமனையில் இது நடந்துள்ளது.

அங்கு நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது அவரிடம் ஒருவர் இதுகுறித்து தெரிவித்தார். மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க உத்தரவிட்டு உள்ளே சென்று ஆய்வு செய்தார். பிணவறையின் கூரையில் 200 அழுகிய உடல்கள் வீசப்பட்டிருந்தன.

latest tamil news

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூறியதாவது, “பிணவறை அதிகாரிகளிடம் இந்த உடல்களை விற்கிறீர்களா எனக்கேட்டேன். மருத்துவர்களிடம் சென்று விளக்கம் கோரினேன். ‘இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன என்றனர். பெண்களின் உடல்கள் மறைக்கப்படாமல் நிர்வாண கோலத்தில் கிடந்தன, என்றார்.

நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். மரியம் அஷ்ரப் கூறுகையில், “இந்த உடல்கள் மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அரசு விதிகளின் படி செயல்படுகிறது,”என்றார்.

பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் இலாஹி இதனை விசாரிக்க சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். விசாரணையை மூன்று நாட்களில் முடிக்க, உடல்களை தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உடல்கள் அனைத்தும் கழுகுகளுக்கு தீவனமாக பயன்படுத்த கூரையில் வைக்கப்பட்டன என தகவல் வெளியானது.

இவை தங்கள் பகுதியிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்களாக இருக்கலாம் என பலுாசிஸ்தான் பிரிவினைவாதிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.