தற்போதைய சவால்கள் முறியடிக்கப்படும் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

உலகளாவிய COVID-19 சவாலை வெற்றிகரமாக முறியடித்தது போல் தற்போதைய சவால்களும் வெற்றிகொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் காணாத பொருளாதார நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பல சவால்களுக்கு தீர்வு கண்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த 18 ஆம்திகதி  சிலோன் ஒக்சிஜன் (Ceylon Oxygen) கம்பனியின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் நவீன தொழிநுட்பத்துடன் இணைந்த செயற்பாடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியம் வாய்ந்தது என்றும் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்கும் சிலோன் ஆக்சிஜன் நிறுவனமானது, சுகாதாரத் துறையின் நிலைத்த தன்மைக்கும், தரத்திற்கும் சிறந்த சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தரத்தில் சிலோன் ஒக்சிஜன் நிறுவனம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. அதே நேரத்தில் கொவிட்-19 தொற்று காலப்பகுதியில் அதன் பெரும் பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert, இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், குறிப்பாக கடினமான காலங்களில் ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய தரத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் இலங்கையின் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க ஜேர்மன் தயாராக இருப்பதாக Seubert குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.