தூங்கா நகராக மாறிய கோவை… நள்ளிரவு 1 மணி வரை ஜாலி ஷாப்பிங்!

கோவையில் பொதுவாகவே இரவு 10 மணிக்குமேல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிடும். மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தே காணப்படும். ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், நள்ளிரவு 1 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோவை மக்கள் நள்ளிரவில் உற்சாகமாக கடை வீதிகளுக்கு வந்து ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை

கோவை டவுன் ஹால் அருகில் உள்ள பெரிய கடை வீதிக்கு 10.45 மணி வாக்கில் சென்றோம். மக்களில் பலர் மகிழ்ச்சியாக கடை வீதிகளில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். துணிக்கடை மட்டுமல்லாமல், உணவகங்கள், அழகிய ஆபரணக் கடைகள், தெருவோர செருப்புக் கடைகள் என அனைத்து விதமான கடைகளிலும் மக்கள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

கோவை பெரிய கடை வீதி மட்டுமல்லாமல் பிற வணிக பகுதிகளான 100 அடி சாலை, கிராஸ் கட் ரோடு, உக்கடம் போன்ற பகுதிகளும் பரபரப்பாகவே காணப்பட்டன. மக்கள் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதால் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, வியாபாரிகளின் பக்கம் திரும்பினோம். பெரும்பாலான சிறு கடைகளுக்குள்ளும் மக்கள் கூட்டம் இருந்ததை நம்மால் காண முடிந்தது. கடை உரிமையாளர்களுடன் பேசியபோது, ‘வியாபாரம் படிப்படியாக பிக்கப் ஆகிவிட்டது, இரவு நேரங்களிலும் மக்கள் துணிகளை வாங்க வருகிறார்கள். பல புது கலெக்ஷன்ஸ் வந்திருக்கு, கொரோனா காலத்திற்குமுன்பு இருந்த அந்தக் கூட்டம் இன்னும் வரவில்லை; அடுத்தடுத்த நாட்களில் அந்தக் கூட்டமும் வந்துவிடும் என்று நம்புகிறோம். தற்போதைய நிலைக்கு வியாபாரம் நல்லா போகுது’ என்று கூறினர்.

Coimbatore

வியாபாரிகளின் தற்போதைய ஒரே கவலை, வர்ண பகவானை பற்றியே… பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் வரும் இந்த நேரத்தில் மழை ஏதும் வந்துவிட்டால் வியாபாரம் முற்றிலும் கெட்டுவிடும். இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை வராமல் இருந்தால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றனர்.

முழுமையாக கொரோனாவின் பிடியிலிருந்து வெளிவந்தபின்பு வரும் முதல் தீபாவளி என்பதால், இந்த தீபாவளி வியாபாரிகள் மறக்க முடியாத தீபாவளியாக அமையும் என்று எதிர்பார்ப்போம். கோவையில் நள்ளிரவு 1 மணி வரை ஷாப்பிங் செய்ய அனுமதிக்கப்பட்டு இருப்பதுபோல, தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் அனுமதிக்கலாமே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.