ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக உள்ளார் ரோஹித் சர்மா. ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.  இதில் இந்திய அணி குரூப் Aல் பரம எதிரிகளான பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இடம் பெற்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் 2வது டி20 உலகக்கோப்பை இதுவாகும். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ரோஹித் சர்மா இந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க உள்ளார் என்றும், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2024ல் இருவரின் செயல்பாடுகளும் சரியாக இல்லை. கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை. அதே சமயம் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். 

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. ஆனாலும் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ வருங்கால டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாகப் பார்க்கிறது. இந்திய அணிக்கு சமீபத்திய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருந்தார். ஆனால் டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு அறிக்கையில், டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியவை சேர்ப்பதற்கு பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் போது காயம் அடைந்தார்.

அதன் பிறகு அவர் இந்தியாவுக்காக என ஒரு போட்டியிலும் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024ல் தான் நேரடியாக மீண்டும் கிரிக்கெட் விளையாடினார். ஆனாலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முன்பு இருந்த பவர் அவரிடம் இல்லை.  இருப்பினும், ஹர்திக் பாண்டியாவை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று அகர்கர் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இந்த அழுத்தம் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வருங்கால இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பார்க்கப்படுவதால் டி20 உலக கோப்பையில் அவர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று பிசிசிஐயும் எதிர்ப்பார்க்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.