வாட்ஸ்-அப்பிற்கு என்னாச்சு? சுத்தமா வரமாட்டிகுது… தவிக்கும் பயனாளர்கள்!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பேஸ்புக்கை காட்டிலும் வாட்ஸ்-அப் தான் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நண்பகலில் இருந்து வாட்ஸ்-அப் சேவை கிடைக்கவில்லை என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மெசேஜ் அனுப்பினால் யாருக்கும் போகவில்லை. யாரிடமிருந்து மெசேஜும் வரவில்லை. வாட்ஸ்-அப் கால் வேலை செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். குறிப்பாக அலுவலகப் பயன்பாட்டில் அத்தியாவசிய தகவல் தொடர்பு தளமாக வாட்ஸ்-அப் இருப்பதால் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கள் அலுவலக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

வேலை தொடர்பான விஷயங்களை பகிர இயலவில்லை எனக் கூறி வருகின்றனர். தொடக்கத்தில் சில ஆயிரம் பேர் வாட்ஸ்-அப் சேவையில் பிரச்சினை இருப்பதாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து லட்சங்களில் மாறியது.

இந்தியாவில் மட்டும் தான் பிரச்சினையாக இருக்குமோ? என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்-அப் முடங்கி விட்டதாக பயனாளர்கள் புலம்பி வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு வாட்ஸ்-அப் சேவையில் பிரச்சினை என்றால் சில நிமிடங்களில் சரியாகி விடும்.

அப்படியொரு பிரச்சினை நம்முடைய செல்போனில் ஏற்பட்டதா? என்பதை அறிவதற்குள் விரைவாக தீர்வு காணப்பட்டு விடும். ஆனால் கடந்த 45 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ்-அப் சேவை தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் தங்களது வேலையே முடங்கியது போல பயனாளர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர்.

நேரம் ஆக ஆக வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் மீம்ஸ்களும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். வாட்ஸ்-அப் சேவை திரும்ப வந்துவிட்டதா? இல்லையா? என்று நிமிடத்திற்கு ஒருமுறை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பார்த்து செல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.