ரியல் எஸ்டேட் பிளாட்களில் சாலைகள்… அரசு அதிகாரிகளுக்கு வந்தது சிக்கல்!

சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேதாஜி நகர் என மனைப்பிரிவு செய்து குடியிருப்பு மனைகளுக்கான இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வீட்டுமனைகள் தமிழ்நாடு சட்டவிதிகளின் கீழ் வரன்முறைப்படுத்தபடவில்லை.

இவ்வாறு வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவில் அரசின் செலவில் சாலைகள் உட்பட மேம்பாட்டு வசதிகள் செய்து தரக்கூடாது என அரசின் உத்தரவு உள்ளது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள். ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து அரசு செலவில் தனிப்பட்ட நபரின் சொத்துக்களை மேம்படுத்தும் விதமாக சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

எனவே அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று அனுமதியின்றி வரன்முறைப்படுத்தப்படாத மனைகளில் அரசாணை (78/2017) உத்தரவுக்கு எதிராக எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக்கூடாது என்றும், அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.” என அருண் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அரசின் உரிய விதிகளை பின்பற்றாமல் உள்ள வீட்டுமனை பிரிவுகளுக்கு தனிப்பட்ட நபர்களுக்காக சாலைகள் அமைக்கப்படுகிறதா?ட என்று கேள்வி எழுப்பினர்.’அவ்வாறு சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அதற்கான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, ‘அரசின் விதிகளை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு குறித்து மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் உறப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.