நெல் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை.

உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

• உலக வங்கியின் சலுகை அடிப்படையில் 13,000 டொன் யூரியா நாட்டிற்கு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள் பலவற்றின் நன்கொடைகளுக்கு மேலதிகமாகவே உலக வங்கியிடமிருந்து இந்த கடன் கிடைத்துள்ளது.

இலங்கையில் பெரும்போக நெற்செய்கைக்கு சுமார் 150,000 டொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. அதனை முழுமையாக விநியோகிக்க முடியுமென விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சுரேன் படகொட ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விவசாய சேவை மையங்கள் மூலம் இந்த உரங்கள் வயல் உரிமையாளர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. நெல் உரிமையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2 ஹெக்டெயார் வரையான உரங்கள் வழங்கப்படுகிறன. அதனடிப்படையில் விவசாயி தான் பயிர்ச் செய்யும் நிலப்பரப்புக்கு ஏற்ப உர மூடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கமத்தொழில் திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், வேளாண்மை செய்யப்படும் வலயத்தைப் பொறுத்தே விவசாயி ஒருவரால் கொள்வனவு செய்யப்படும் அதிகபட்ச உரத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

மேலும், சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 60,000 ஹெக்டெயார்களுக்கு அவசியமான 12,000 மெட்ரிக் டொன் யூரியா வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக வழங்கப்படும் 50 கிலோ யூரியாவின் விலை 15,000 ரூபாவாகும்.

உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகள் காரணமாக உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக மிகவும் சவாலானதொரு சந்தை நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்தை விலை உயர்வுக்கு மத்தியிலும் விவசாய அமைச்சு, 12,500 மெட்ரிக் டொன், 50,000 மெட்ரிக் டொன் மற்றும் 45,000 மெட்ரிக் டொன் யூரியாவை மூன்று கட்டங்களாக விநியோகிப்பதற்காக மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

இதேவேளை மேலும் 25,000 மெட்ரிக் டொன் யூரியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றும் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
அத்துடன் சலுகைக் கடன் அடிப்படையில் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 21,000 மெட்ரிக் டொன் யூரியா பெரும் போகத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஆதரவுடன், துறைமுகங்களில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கும், விவசாய சேவை மையங்களில் இருந்து விவசாயிகளுக்கும் உரங்கள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க விசேட கட்டமைப்பொன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தக் கட்டமைப்பு சுற்றாடல் மற்றும் சமூக பாதுகப்பு மேலாண்மை, குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பாதிப்புகளை கண்காணிப்பதற்காக பயன்படுகின்றமை குறிப்பிடதக்கது.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.