பியகம வைத்தியசாலை “வெல்னஸ் விலேஜ்” திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

‘ஆரோக்கியமான கிராமம்’ திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவிற்கு அமைய சுற்றுலாத்துறையில் “மெடிகல் டுவரிசம்” பிரிவை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு, ‘வெல்னஸ் விலேஜ்’ திட்டம் இலங்கையில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்டு சர்வதேச தரத்திலான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

வைத்தியசாலையின் திட்டங்கள் குறித்து ஆராய்ந்த ருவன் விஜேவர்தன, காணி சுவீகரிப்புப் பணிகளை துரிதப்படுத்தி வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், பியகம பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன சம்பத், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பு செயலாளர் கே.பி.தயாரத்ன, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் ராஜித அபேகுணசேகர, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திரரத்ன பல்லேகம, பியகம பிரதேச செயலாளர் சந்திமா சூரியாரச்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.