பௌத்த மத விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பிக்குமார் தொடர்பில் தலைமை பிக்குமாருக்கு அறிவிக்க அமைச்சின் தலையீட்டுடன் புதிய வேலைத்திட்டம்

பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு முன்மொழிவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தலைமை பிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்த வயதில் சிறுவர்களை துறவறம் புகச் செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழு

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருசில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலாயத்தன பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தேவையான 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு இன்மை காரணமாக இதுவரை செயன்முறைப் பரீட்சை நடத்தப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. ஒதுக்கீடு இன்மை காரணமாக பரீட்சைகள் 6 வருடகாலம் பிற்போடப்பட்டமை தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர், இதனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரியப்படல கட்டமைப்பைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். சொத்துக்களைக் கொண்டுள்ள பௌத்த வழிபாட்டுஸ்தலங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரோ, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.