நடிகை சமந்தாவை பாதித்த Myositis… என்னவெல்லாம் செய்யும்? மருத்துவ விளக்கம்

பிரபல நடிகை சமந்தா, நேற்று இன்ஸ்டாவில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று குறிப்பிட்டு, தனக்கு ‘மயோசைட்டிஸ்’ (Myositis) எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாகவும், அதில் போராட்டமான நாள்களைக் கடந்து, இப்போது முழுமையாக மீளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் உருக்கமாகப் பதிவு செய்திருந்தார்.

அதென்ன மயோசைட்டிஸ்… அது யாரை பாதிக்கும், அறிகுறிகள் எப்படி இருக்கும்? சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் விளக்குகிறார்…

ஸ்பூர்த்தி அருண்

“மயோசைட்டிஸ் என்பது தசைகளின் இன்ஃப்ளமேஷன், அதாவது வீக்கம். இது பரவலாக காணப்படுகிற பிரச்னை அல்ல. சற்றே அரியவகை பாதிப்புதான். தசைகளில் ஏற்படும் இந்த வீக்கம் பல காரணங்களால் வரலாம். சிலருக்கு சில வகையான இன்ஃபெக்‌ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாகவும் வரலாம்.

அறிகுறிகள்:

தசைகளில் பலவீனம், சோர்வு மற்றும் தசைவலி.

எப்படி உறுதிப்படுத்துவது?

`ஆட்டோஇம்யூன் பேனல் பிளட் டெஸ்ட்’ செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு தசை அல்லது சருமத்தை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சிலருக்கு ‘எலக்ட்டோமையோகிராபி (Electromyography அல்லது EMG) மற்றும் எம்ஆர்ஐ சோதனைகள் தேவைப்படும்.

சிகிச்சை

சிகிச்சை என்ன?

பாதிப்பின் தீவிரம் குறைக்க சில வேளைகளில் ஸ்டீராய்டு மருத்துகளும், இம்யூனோசப்ரசென்ட் வகை மருந்துகளும் தேவைப்படும்.

எந்த வகையான மயோசைட்டிஸ் என்பதைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இவை தவிர, பிசியோதெரபி, யோகா, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் போன்றவையும் செய்ய வேண்டியிருக்கும். இன்ஃப்ளமேஷனை குறைக்கும் வகையிலான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

அசைவ உணவுகள், பால் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரீஃபைண்டு உணவுகள், எண்ணெய் உணவுகள், வெளி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துவிட்டு, ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

-ராஜலட்சுமி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.