ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் – ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. பத்திரிகையாளர் நல நிதியத்துக்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பத்திரிகையாளருக்கு நிதியுதவி, கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.89 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்துரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டதுடன், 20 வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்துவழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு, எந்த இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும்அடையாளமாக, இதற்கான உத்தரவுகளை 7 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை பொறுப்பு செயலர் ம.சு.சண்முகம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.