தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். ஆண்டுதோறும் இதமான குளிர் இருந்துகொண்டே இருப்பதால் கோடைக்காலம் மட்டுமல்லாது அனைத்துக் காலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கும்.
குறிப்பாக கொடைக்கானலில் உள்ள டம்டம் பாறை, வெள்ளி அருவி, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடு, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலாப் பகுதி போன்ற இடங்களை சுற்றுலாப் பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கின்றனர்.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் கோடைக்காலத் திருவிழா நடத்தப்படும். சுமார் 21 ஏக்கர் பரப்பில் பிரையண்ட் பூங்காவில் 5 ஏக்கர் பரப்பில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சிக்கு மட்டும் சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பிளம்ஸ் பழம், ஆரஞ்ச், மலைப்பூண்டு, கேரட் உள்ளிட்ட விவசாயமும் நடந்துவருகிறது.
இத்தகைய சூழலில் கொடைக்கானலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலை வனப்பகுதியில் இரண்டு வாரங்களாகப் பரவிய காட்டுத்தீயால் 30 ஏக்கர் வனபகுதி தீக்கீரையாகியிருக்கிறது. மன்னவனூர், பூண்டி, பூம்பாறை, கூக்கால் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் இரவு, பகல் எனத் தொடர்ச்சியாகப் பற்றியெரிந்த தீயால் வாழ வழியின்றி யானை, காட்டுமாடு, மான், குரங்குகள், பறவைகள் மலையை விட்டுக் கீழே இறங்கத் தொடங்கியுள்ளன.
கொடைக்கானல் மலையில் இருந்து வரும் சிற்றோடைகளால் தான் மன்னவனூர், பேரிஜம் ஏரிகள் நிறைகின்றன. மேலும் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கும், பழநி வரதமாநதி அணைக்கும் நீர் வரத்து இருக்கும். இந்த இரு அணைகளும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்திற்கான பாசனத்திற்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது காட்டுத்தீயினால் அழிந்துள்ள வனத்தில் இருந்து சிற்றோடைகளில் வரும் நீர் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் மேல்மலை மக்கள் மட்டுமல்லாது பெரியகுளம், பழநி பகுதி மக்களுக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பழநியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சதீஸ் முத்துகோபால், கடந்த ஆண்டும் நிகழாண்டும் கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. கொடைக்கானல் மலையில் மரங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட வாய்ப்பு இல்லை. மனிதத் தவறுகளால் மட்டுமே தீப்பரவல் ஏற்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் சமைப்பது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வனத்தை ஒட்டிய பட்டாதாரர்களாலும் வனப்பகுதிக்குத் தீ வைக்கப்படுகிறது. எனவே வனத்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கொடைக்கானல் மலையில் நிரந்தரமாக ரோந்து வாகனத்தை வாங்கிக்கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். வனத்திற்கும் வன உயிர்களும் தீமை செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள புற்கள் மழைகாலத்தின் போது நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் கோடைக் காலத்தின் போது வேரின் வழியாகக் கசியச் செய்யும். அவ்வாறு செய்யும் போது சிற்றோடைகள் உருவாகி ஏரி, அணைகளுக்கு நீர் வரத்து இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீப் பரவலால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கும்.
காட்டுத்தீயால் வனத்தில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் பறவைகளும் வெளியேறும். அப்போது சாலை விபத்துகளிலும், மின்வேலிகளிலும் சிக்கி உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் மனித- விலங்கு மோதல்களும் அதிகமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.