கொட்டித் தீர்த்த கனமழை..! – வடசென்னை பகுதிகள் மீண்டதா… இல்லை மீட்கப்பட்டதா?!

சென்னையில் சாதாரண மழை பெய்தாலே அதிகளவில் பாதிக்கப்படுவது வடசென்னை பகுதிகள் தான். திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர்,  திரு.வி.க நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கும். இதுவே, பெருமழை பெய்தால் போதும், இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள்  கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அரசு சார்பில் அமைக்கப்படும் நிவாரண முகாம்களில் வடசென்னை பகுதி மக்கள் தான் அதிகளவில் தங்கவைக்கப்படுவார்கள். குறிப்பாக, இப்பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்குக் குறைந்தது 3 நாள்களாவது ஆகும். எனவே, வடசென்னை பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். 

இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பருவமழை காரணமாகக் கடந்த 1,2-ம் தேதிகளில் இரவு, பகலாகச் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக தென்சென்னை  பகுதிகளைக் காட்டிலும் வடசென்னை பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால்கள் சரிவர முடிக்கப்படாத இடங்களில் வழக்கத்தை விட அதிக அளவிலேயே தண்ணீர் தேங்கியது. பட்டாளம் மார்கெட், பெரம்பூர், வில்லிவாக்கம், வியாசார்பாடி, திருவொற்றியூர், மணலி, கொளத்தூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாகவே தண்ணீர் தேங்கி இருந்தது. 

திரு.வி.க நகர்

தொடர்ந்து, மழைநீரை அகற்றும் பணியில் 19,500 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுபோக, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை பணியாளர்களும் களத்தில் இறங்கினர். அந்தவகையில், சென்னையில் நேற்று காலை முதலே மழை பொழிவு குறைந்ததால் வடசென்னை பகுதிகளில் மழைநீர் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டது. மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்கப்பட்ட பகுதிகளில் நேற்று காலை தண்ணீர் வடிந்தது. மழைநீர் வடிகால்கள் பணி முடிக்கப்படாத கொளத்தூர், புளியந்தோப்பு, திரு.வி.க நகர், மணலி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வெளியேறக் காலதாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற பகுதிகளில்  மோட்டார்  பம்புகள்  மூலமாகவே மாநகராட்சி பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றினர். 

ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்குச்  சென்னை மாநகராட்சி உணவு பொட்டலங்களைக் கூட வழங்கவில்லை. புளியந்தோப்பு, திரு.வி.க நகர் பகுதிகள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2 நாள் மழைக்கே இந்த அரசு கதறுகிறது. இன்னும், நவம்பர், டிசம்பர் மாதங்கள் முழுமையாக முடியவில்லை. இதை எப்படி  சமாளிக்க  போகிறீர்கள்?

கே.என்.நேரு

2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தூர் வாரிவிட்டதாக  கூறுகிறார்கள். இத்தனை கிலோ மீட்டருக்கு தூர் வாரியிருந்தால் எதற்காக வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது? முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியே மிதக்கிறது. பல இடங்களில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்துகிறார்கள். அப்படியென்றால் வாய்க்கால் வழியாகத் தண்ணீர் செல்லவில்லை என்பதே கேள்வியாக எழுகிறது” என்றார்.  

இதேபோல், திரு.வி.க நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், “மோட்டார்  பம்புகளை  வைக்காமல்  தானாகவே தண்ணீர் வெளியேறுவதற்கு என்ன வழி செய்ய வேண்டும் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.  மெட்ரோ லைன் இல்லாத இடங்களில் அவற்றை அமைக்க அறிவுறுத்தியிருக்கிறோம். சென்னையில் உள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகள் சிறப்பாக இருக்கிறது. திரு.வி.க நகர், கொளத்தூர் தொகுதிகளில் திருப்புகழ் கமிட்டி குறிப்பிடாத இடங்களில் தான் தண்ணீர் தேங்கியது. எனவே, அடுத்த மழைக்குத் தண்ணீர் நிற்காத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்” என்றார். 

பெரம்பூர்

வடசென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் உடனடியாக வெளியேறியதற்கு காரணம் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டதே என்கின்றனர் வடசென்னை பகுதி மக்கள். ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தவில்லையென்றால் ஒரு வாரம் ஆனாலும் மழைநீர் வடிந்திருக்காது என்கின்றனர் ஆதங்கத்துடன். எனவே, கூடிய விரைவில் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.