“பதவி உயர்வுக்காகவே இப்படி பேசி வருகிறார் தமிழக ஆளுநர்” – பொன்முடி விமர்சனம்

விழுப்புரம்: “தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக தமிழக ஆளுநர் பேசி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது கண்டிக்கதக்கது” என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளில் 2017-2021ம் ஆண்டு பட்டம் முடித்த 1,114 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியது: “தமிழக அரசு புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதற்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறைபாடுகளை களைந்துள்ளதாக பதில் அனுப்பியுள்ளது. புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தவறாக சொல்கிறார். இந்தக் கல்வி கொள்கையை மத்திய அரசு இந்தியை திணிப்பதற்காக கொண்டுவந்துள்ளனர். இக்கல்வி கொள்கை தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். மாநில மொழிக்காக புதிய கல்வி கொள்கையில் எதையும் சொல்லவில்லை. 2010-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக்த்தில் தமிழ் வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் தமிழ் பாடம் 2 செமஸ்டர்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை நீக்குவதற்கு நீதிமன்றம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நடந்து முடிந்த, நடைபெறும் அரசியல் தெரியவில்லை.

நம் அரசியல் அமைப்பே மதசார்பாற்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசியுள்ளார். இது மிகப்பெரிய தவறாகும். நாம் அனைவரும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்கள். மதசார்பற்ற நாடு என்பதற்கு பதிலாக பல்வேறு நாடுகள் மதத்தின் அடிப்படையில் இருக்கின்றன. இந்தியாவும் அதுபோல இருக்கவேண்டும் என்று ஒரு ஆளுநனர் பேசுகிறார் என்றால் என்ன பொருள்? இதனை கண்டித்து டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆளுநரை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரை திரும்ப பெற வலியிறுத்தியுள்ளோம்.

பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், மாநில அரசை எதிர்த்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மாநில அரசை எதிர்த்ததால் அவருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக தமிழக ஆளுநர் இப்படியெல்லாம் பேசி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது கண்டிக்கதக்கது” என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.