`பத்திரிகையாளர் டு முதல்வர் வேட்பாளர்; குஜராத்தில் ஆம் ஆத்மியின் முகம்!' – யார் இந்த இசுதன் காத்வி?

டெல்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில், பஞ்சாப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டிவருகிறது. அதற்கு ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் வெற்றிபெற உதவிய பாணியையே, குஜராத்திலும் செய்திருக்கிறது. அதாவது ஆம் ஆத்மி, பஞ்சாப் தேர்தலின்போது கட்சியின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க, வாட்ஸ்அப் நம்பர், மின்னஞ்சலை அறிவித்து அதன் மூலம் மக்களே யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் எனக் கூறியிருந்தது. அதன்படியே, பஞ்சாப்பில் பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இறுதியில் ஆம் ஆத்மி வெற்றிபெற பகவந்த் மான் முதல்வரானார்.

அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் – ஆம் ஆத்மி

தற்போது குஜராத்திலும் முதல்வரை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் நம்பர், மின்னஞ்சல் என அதே வேலையையே ஆம் ஆத்மி செய்திருக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த இசுதன் காத்வி என்பவர் மக்கள் மூலம் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என கெஜ்ரிவால் இன்று அறிவித்திருக்கிறார். மேலும், இந்த வாக்கெடுப்பில் குஜராத்தின் ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியாவைப் பின்னுக்குத் தள்ளி 73 சதவிகித வாக்குகளை இசுதன் காத்வி பெற்றிருக்கிறார் எனவும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

இசுதன் காத்வி – கெஜ்ரிவால்

யார் இந்த இசுதன் காத்வி?!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைப் பொதுச்செயலாளராக தற்போது பதவி வகிக்கும் இந்த இசுதன் காத்வி (40), துவாரகா மாவட்டத்தின் பிபாலியா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மேலும், இவர் மாநிலத்தின் 48 சதவிகித மக்கள் தொகைகொண்ட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இசுதன் காத்வி இன்றைக்கு ஓர் அரசியல் தலைவராக அறியப்பட்டாலும், பொதுவாழ்வில் முதலில் இவர் ஒரு பத்திரிகையாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியிருக்கிறார்.

இசுதன் காத்வி

அதாவது ‘யோஜனா’ என்ற பிரபல தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பத்திரிகையாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய இசுதன் காத்வி அடுத்ததாக, ETV குஜராத்தி ஊடகத்தில் 2007 முதல் 2011 வரை போர்பந்தரில் ஆன்-ஃபீல்டு பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் இவர், குஜராத்தின் டாங், கபரடா தாலுகாக்களில் சட்டவிரோதமாகக் காடுகளை அழிப்பதற்கான ரூ.150 கோடி மதிப்பிலான மோசடியைத் தனது செய்தி நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தியதன் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து 2015-ல் VTV குஜராத்தி ஊடகத்தில் தலைவர் பொறுப்பில் சேர்ந்த இசுதன் காத், குஜராத்தி ஊடகத்திலேயே இளம் ஊடகத் தலைவராக உயர்ந்தார். அதன் பின்னர், அகமதாபாத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைமையகத்தைத் திறப்பதற்காகச் சென்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியால், 2021-ல் இசுதன் காத்வி, ஆம் ஆத்மியில் சேர்ந்து அரசியல் களத்தில் குதித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும் கெஜ்ரிவால், இசுதன் காத்வியை, “குஜராத்தில் ஆளுங்கட்சியும் காங்கிரஸும் சேர்ந்து உருவாக்கிய குழப்பத்தைச் சுத்தம் செய்வதற்கான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையின் மிகப்பெரிய தியாகம்” என்று புகழ்ந்திருக்கிறார். இப்படி பத்திரிகையாளராக இருந்து தற்போது ஒரு கட்சியின் முதல்வர் வேட்பாளராகப் பல படிகளைக் கடந்து உயர்ந்திருக்கும் இசுதன் காத்வி, முதல்வராக வெற்றிபெறுவாரா… ஆம் ஆத்மியின் திட்டம் குஜராத்தில் பலிக்குமா என்பது டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.