பழநி அருகே சித்தரேவு கிராமத்தில் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் உச்சி காளியம்மன் கோயில்,  செல்வ விநாயகர் கோயிலில் பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். கடந்த 10 வருட காலமாக பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட விடாமல் சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய முடிவு எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து எங்கள் சாதி மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர். இது சட்டவிரோதமானது. அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை மறுக்கக்கூடிய செயல். கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்கள் வழிபாடு செய்ய அனுமதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்த நடவடிக்கைக்கு அதிரடியாக தடை விதித்தனர். மனுவிற்கு   கலெக்டர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.