Aavin: நீல நிறம், பச்சை நிறம் பால் விலை உயர்வு? – அமைச்சர் நாசர் விளக்கம்!

ஆவின் நிறுவனத்தின் நீல நிறம் மற்றும் பச்சை நிறம் பால் விலையை உயர்த்த வாய்ப்பு இல்லை என, தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆவினில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விற்பனை விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது. இந்த விலை மாற்றம் நாளை (நவம்பர் 5) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பால் விலை உயர்வு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தி விலை, 32 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. எருமைப் பால் 41 ரூபாயில் இருந்து 45 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்படக் கூடிய ஆரஞ்சு கலர் ஃபுல் க்ரீம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளது

ஆவின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதே விலையே தொடரும். வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனியார் பாலை காட்டிலும் குறைவாகவே ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது. நீல நிறம், பச்சை நிறம் பால் விலையை உயர்த்த வாய்ப்பு இல்லை.

கடந்த ஆட்சி காலத்தில் 6 ரூபாய் பால் விலை உயர்த்தப்பட்டது. 3 ரூபாய் பால் விலை குறைத்ததால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது 53 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஆவின் இனிப்பு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் வரலாற்று நிகழ்வாக 116 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்பு விற்பனை நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.