சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷ்யாம் நேஹி காலமானார்| Dinamalar

சிம்லா, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான, ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த, 106 வயது முதியவர், வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக 1952 துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது.

பனி மூட்டம், பலத்த மழை போன்ற மோசமான வானிலை காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன், 1951 இறுதியில் ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் நடந்தது.

இதில், முதல் ஓட்டைச் செலுத்திய பெருமைக்கு உரியவர் ஷ்யாம் சரண் நேஹி. ஹிமாச்சலின் கின்னாவூர் மாவட்டம் கல்பாவில், முதல் ஓட்டை செலுத்தியபோது அவருக்கு வயது 34.

இதற்கு பின் இதுவரை நடந்த அனைத்து லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் நேஹி, தவறாமல் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். இதுவரை 34 தேர்தல்களில் அவர் ஓட்டளித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராகவும் நேஹி நியமிக்கப்பட்டார்.

ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் வரும் 12ல் நடக்கிறது.

இதில், 100 வயதை கடந்தவர்களுக்கு தபால் வாயிலாக ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த 3ல், தபால் வாயிலாக நேஹி ஓட்டளித்தார். இதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கவுரவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேஹி, வயது மூப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.

அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நேஹியின் மரணத்துக்கு தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

‘அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய ஜனநாயகக் கடமை, எங்களை சிலிர்க்க வைக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும், குறிப்பாக இளைஞர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் மிகப் பெரிய முன் உதாரணமாகவும், துாண்டுதலாகவும் நேஹி விளங்கினார்’ என தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், நேஹி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.