ரஞ்சிதமே… ரஞ்சிதமே… கவனம் ஈர்த்த பாடகி… யார் இந்த மானசி?

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகாமல் புதிய போஸ்டர் வெளியானது. அதுமட்டுமின்றி படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருந்தது படக்குழு.

இந்த சூழலில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் நவ. 5ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் பாடல் வெளியானது. ‘ரஞ்சிதமே… ரஞ்சிதேமே’ என தொடங்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். தமன் இசையில் முதல்முறையாக விஜய் நடிக்கிறார் என்பதாலும், விஜய் பாடியதாலும் இந்த பாட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ‘ரஞ்சிதமே… ரஞ்சிதேமே’ பாடல் கவர்ந்துள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நேற்று யூ-ட்யூபில் வெளியான இப்பாடலில், நடிகர் விஜய், ராஷ்மிகா ஆகியோர் நடனமாடும் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், பாடல் உருவான விதம் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. 

குறிப்பாக, இப்பாடலில் பாடகி மானசியும் பாடியுள்ளதை தொடர்ந்து, அவரும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தார். கையில் கரும்புடன், வெண்ணிற ஆடையில் இருக்கும் மானசியின் ஸ்டைலை பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். நேற்று மாலைக்கு பின், அவரின் குரலுக்கு மட்டுமின்றி அவருக்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். 

சென்னையை சேர்ந்த பாடகி எம்.எம். மானசி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் மொத்தம் 170 பாடல்களுக்கும் மேலாக பாடியுள்ளார். 2013ஆம் ஆண்டில் தெலுங்கு படம் மூலம் அறிமுகமான மானசி, தமிழிலும் அதே ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கொடி’ திரைப்படத்தில் ‘போராளே’ என்ற பாடலை பாடியிருந்தார். 

தொடர்ந்து, ஆரம்பம், வாலு, அஞ்சான், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வன்மம், காக்கி சட்டை, புலி, சகலகலா வல்லவன், யாகவாரையினும் நாகாக்க, தாரை தப்பட்டை, விவேகம் என பல்வேறு தமிழ் படங்களில் பாடியிருக்கிறார். ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி, புலி படத்தில் சோட்டவாளை ஆகிய பாடல்களும் மிகவும் அதிகம் வரவேற்பை பெற்றன. 

மேலும், இவர் பாடகி மட்டுமின்றி, பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். ஏறத்தாழ 35-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு மேல் இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஞ்சானில் சமந்தா, பாகுபலியில் தமன்னா, மாரியில் காஜல் அகர்வால், கொடியில் திரிஷா ஆகியோருக்கு மானசிதான் டப்பிங் கொடுத்துள்ளார். இருமுகன் தெலுங்கு டப்பிங் படத்தில் நயன்தாராவுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், இவர் ராம்சரண் நடிப்பில், தமன் இசைமைப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் வரும் ரங்கம்மா மங்கம்மா பாட்டிற்காக சைமா விருதையும் 2018ஆம் ஆண்டில் வாங்கியுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manasi M M (@manasimm)

‘ரஞ்சிதமே… ரஞ்சிதமே…’ பாடலின், லிரிக்கல் வீடியோவின் படப்பிடிப்பு குறித்து பாடகி மானசி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.