திரை அரங்கில் ரசிகர்களை தாக்கிய மஹா., மாஜி அமைச்சர் மீது வழக்கு| Dinamalar

தானே,ஹர் ஹர் மஹாதேவ் என்ற மராத்தி திரைப்படத்தை திரையிட விடாமல் தடுத்து, ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான ஜிதேந்திரா ஆவாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஹர் ஹர் மஹாதேவ் என்ற மராத்தி மொழி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளதாக தேசியவாத காங்., குற்றஞ்சாட்டியது.

தானே மாவட்டத்தில் உள்ள, ‘மல்டிப்ளக்ஸ்’ திரையரங்கில் இத்திரைப்படத்தின் இரவு காட்சி நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.

அப்போது, முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான ஜிதேந்திரா ஆவாத், 100க்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்களுடன் திரையரங்கிற்குள் நுழைந்தார்.

கட்சியை நிறுத்தும்படி அவர்கள் கலாட்டா செய்ததை அடுத்து, இரவுக்காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர். ரகளையில் ஈடுபட்ட தேசியவாத காங்., கட்சியினரை கடுமையாக விமர்சித்தனர்.

ரசிகர்கள் சிலரை தேசியவாத காங்., கட்சியினர் தாக்கினர். இதையடுத்து, ஜிதேந்திர ஆவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:

ஹர் ஹர் மஹாதேவ் திரைப்படத்தை காண வரும் ரசிகர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்படத்தின் மீது மாற்றுக் கருத்து இருந்தால், அதை ஜனநாயக பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். நான் இன்னும் திரைப்படத்தை பார்க்கவில்லை. எனவே, அது பற்றி கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.