எம்பிபிஎஸ் படிக்க ரூ.24 லட்சம் கட்டணம் ஆந்திர அரசு உத்தரவை ரத்து செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: எம்பிபிஎஸ் கல்வி கட்டணத்தை ரூ.24 லட்சமாக உயர்த்திய ஆந்திர அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திராவில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை ரூ.24 லட்சமாக உயர்த்தி, கடந்த 2017ம் ஆண்டு அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு செய்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சுதன்ஷு துலியா அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.24 லட்சமாக, அதாவது முந்தைய கட்டணத்தை விட 7 மடங்கு அதிகமாக உயர்த்துவது நியாயமே கிடையாது. கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல. கல்விக் கட்டணம் எப்போதுமே கட்டுக்குள் இருக்க வேண்டும். மேலும், கல்வி கட்டணத்தை மாற்றும் போதோ, உயர்த்தும் போதோ சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரைகளின் படியே முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆந்திர அரசு அவ்வாறு செய்யவில்லை. எனவே, அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும்’ என உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.