"கட்டணமில்லாத பேருந்து திட்டத்தால், பெண்களின் பொருளாதார வலிமை கூடியுள்ளது" – முதல்வர் ஸ்டாலின்

கரூரில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு உத்தரவு வழங்கும் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து பெய்யும் மழையால் மண் குளிர்ந்துள்ளது. இந்த மண்காக்கும் விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகளை வழங்குவதன் மூலம், என் மனமும் குளிர்ந்துகொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னாள் நின்றுக்கொண்டிருக்கிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜி, எதை செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிப்பார். இந்த விழாவிலும் முத்திரை பதித்துள்ளார். தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய நாளாக இன்று அமைந்துள்ளது. ஏற்கனவே, ஒரு லட்சம் இலவச இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து, இன்று கூடுதலாக 50,000 பேர்களுக்கு வழங்குகிறோம்.

ஒட்டுமொத்தமாக 1,50,000 இணைப்புகள், அதுவும் இந்த குறுகிய காலத்தில், அதாவது 15 மாதங்களுக்கும் செய்து முடித்திருக்கிறோம். இதற்கு முன் எந்த அரசும் இத்தகைய சாதனையை செய்த வரலாறு கிடையாது. இந்தியா அளவிலும் வேறெந்த அரசுகளும் இத்தகைய சாதனையை செய்துக்காட்டியதில்லை. அதனால்தான், பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று குறிப்பிட்டேன். நான் மேடைக்கு வந்தவுடன் இங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை பார்த்தேன். அது என்ன என்று கேட்டபோது, இங்கு பயனாளியாக உள்ள 50,000 விவசாயிகளை மேடையில் அமரவைக்கமுடியாது.

இலவச மின் இணைப்பு வழங்கும் விழா

அதனால், 20,000 விவசாயிகளை மட்டும் இங்கே அழைத்து வந்துள்ளோம். அவர்களின் பெயர், முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய புத்தகம் என்று சொன்னார். ஆக, நாங்க வெறுமனே திட்டத்தை அறிவித்துவிட்டு செல்பவர்கள் அல்ல. ஒட்டுமொத்த விவசாயிகளின் சார்பில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நான் பாராட்டுகளை, நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் இலவச இணைப்புகள் வழங்குவோம் என்று நாங்க அறிவித்தபோது, பலரும் இதை விமர்சித்தாங்க. இது நடக்குமா, சாத்தியமா, முடியுமா என்று கேட்டார்கள். நடக்குமா என்பதை நடத்திக் காட்டுவதும், சாத்தியமா என்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் தி.மு.கவின் ஆட்சியில் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இனி, அப்படி ஒரு சந்தேகம், எண்ணம் யாருக்கும் வரவேண்டாம் என்று நினைக்கிறேன். 23.09.2021 அன்று இந்த திட்டத்தை நான் துவக்கினேன். துவக்கி வைத்த ஆறே மாதத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இப்போது, 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளோம். இதன்மூலம், ஒன்றரை லட்சம் விவசாயிகள் பலனடைய இருக்கிறார்கள். அதனால், அந்த உழவர்கள் மூலமாக தமிழ்நாட்டு எவ்வளவு உணவுபொருட்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே, எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் மறைந்த தலைவர் கருணாநிதியை நினைத்துப் பார்க்கிறேன். ஏன்னா, முதன்முதலில் இந்தியாவிலேயே உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் கலைஞர். இந்த 30 ஆண்டுகாலத்தில் விவசாயிகள் விவசாயத்தை வளமாக்க அன்றும், இன்றும், என்றும் காரணகர்த்தாவாக இருந்தார். கடந்த பத்தாண்டுகாலம் ஓர் ஆட்சி நடந்தது. நடந்தது என்று சொல்லமுடியாது. இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும். அந்த பத்தாண்டு காலத்தில் மொத்தமே 2,20,000 வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டது. ஆனால், நாம் இந்த பதினைந்து மாதக் காலத்தில் 1,50,000 இணைப்புகளை வழங்கியிருக்கிறோம்.

விழாவில் பேசும் முதல்வர் ஸ்டாலின்

‘சொன்னதை செய்வோம்;செய்வதை சொல்வோம்’ என்பது கலைஞரின் முழக்கம். ‘சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்’ என்பது என்பது ஸ்டாலினுடைய முழக்கம். இதுதான் வித்தியாசம். அந்த வரிசையில் தான் சொல்லாமல் இதை செய்திருக்கிறோம். நம் ஆட்சியில் நல்லா மழை பெய்கிறது. நல்ல விளைச்சல் கிடைக்கிறது. பாசன பரப்பும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால், உணவு உற்பத்தி கூடுதலாகிக்கொண்டிருக்கிறது. இதனால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, உணவுப்பொருட்களின் விலையும் குறைவாக இருக்கிறது. விலைவாசி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து வசதி தரப்பட்டிருக்கிற காரணத்தினால், பெண்களின் பொருளாதார வலிமை கூடியுள்ளது. பல சமூகநல திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் வாழ்க்கைத்தரம் நிலையானதாக அமைந்திருக்கிறது. இவை அனைத்தும் நம் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.