சவூதி அரேபியாவில் ,இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்

சவூதி அரேபியாவில் நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், வீட்டுப் பணிப்பெண்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறியியலாளர் அஹமட் பின் சுலைமான் பின் அப்துல் அஸீஸ் அல் ரஜ்ஹிக்கும் இடையில் (08) இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு, கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆட்சேர்ப்புக்காக இருதரப்பு குழுக்கள் இரண்டை நியமிப்பதற்கும், வீட்டுப் பணியாட்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழு ஒன்றை நியமிப்பதற்கு சவூதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர், இணக்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது அந் நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் அதிகரிப்பதற்கும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கான பரிந்துரைகள் முப்பது நாட்களுக்குள் முன்வைக்கப்பட உள்ளன. இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், அரபு மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள சேவை ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அத்தடன், பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மாத்திரம் முன்னர் வழங்க்கப்பட்டு வந்த கட்டுமானத் துறையின் பல வேலை வாய்ப்புகள் இலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் , ஆட்சேர்ப்பு கட்டணம் மற்றும் செலவுகளை மறுபரிசீலனை செய்யவும், ஊழியர் முறைகேடுகளை மேற்கொண்ட சுமார் 400 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை மூடவும் தீர்மானித்துள்ளனர்.

இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.