போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என தெரிவித்து இருந்தார்.

சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அபராத தொகை அதிகரித்து உள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல் துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொது மக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு குறித்து மூன்று வாரங்களில் தமிழக அரசும், போக்குவரத்து துறை ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.