ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு!

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும் பாஜக தீவிரமாக உள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரமாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியாக இருக்கிறது. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜக – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது. இது தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.