மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர்: மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 20,000 பேருக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படுவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய முதல்வர்; ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை கொடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டன. ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல, செயல்படுத்தும் அரசு திமுக அரசு. ஒரு ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின்இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். நடக்குமா என அனைவரும் கேட்டனர், நடக்குமா என்பதை நடத்திக்காட்டுவதே திமுக அரசு. மின் இணைப்பு திட்டத்தை துவக்கி வைத்த ஆறே மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

உள்ளவர்களுக்கு இலவச மின்சார திட்டத்தை முதல் முறையாக செயல்படுத்தியவர் கலைஞர். திமுக ஆட்சி காலத்தில் பாசனப்பரப்பு விரிவடைந்து வருகிறது. உணவுப்பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது; விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய நாளாக இந்நாள் உள்ளது. எங்கள் நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறோம்.

மின் நுகர்வோர் குறைதீர்ப்பதற்காக மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மின்னகத்தில் அளிக்கப்படும் புகார்களில் 99% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும். 2030க்குள் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 65,367 மெகா வாட்டாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்தால் உணவுப்பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிப்பால் மற்ற மாநிலங்களை விட உணவுப்பொருள் விலை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகமாக உள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளது. கட்டணமில்லா பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளதால் பெண்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிலையானதாக உள்ளது. இதுவே திமுக வழங்கும் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.