முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

மலையாள திரையுலகில் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான வினீத் ஸ்ரீனிவாசன் ஹிர்தயம் படத்தின் மூலம் தமிழ் மக்கள் இடத்திலும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அபினவ் சுந்தர் நாயக் இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

கேரளாவில் விபத்து நடைபெற்றால் அதற்கு நஸ்டஈடு வாங்கி தரும் வழக்கறிஞராக சுராஜ் உள்ளார். இதில் மறுபுறம் வினீத் ஸ்ரீனிவாசன் எப்படியாவது மிகப்பெரிய வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த கேசும் கிடைக்காமல் உள்ளது. ஒரு கட்டத்தில் சுராஜ் செய்யும் வேலை இவருக்கு தெரிய வருகிறது. பின்பு அதே வேலையை வினீத் ஸ்ரீனிவாசனும் செய்ய தொடங்குகிறார். பின்பு அவருக்கு ஏற்படும் இடர்பாடுகள் என்ன என்பதே முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படத்தின் கதை.

படம் ஆரம்பிக்கும் முன்பு போடப்படும் எச்சரிக்கை வாசகம் தொடங்கி, படம் முடியும் வரை எப்படியெல்லாம் புதுவிதமாக ஒரு படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்துள்ளனர் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படகுழுவினர். காட்சிக்கு காட்சி சிரிப்பலைகள் அள்ளும் அளவிற்கு படம் உள்ளது. வினீத் ஸ்ரீனிவாசன் பாடிலாங்குவேஜ் மற்றும் நடிப்பில் ஒரு வக்கீலாகவே வாழ்ந்து உள்ளார். தனக்கு வரும் எதிர்ப்புகளை லாபகரமாக அவர் கையாளும் இடங்களில் கைதட்டல்கள் பறக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனையில் மாட்டிகொண்டு எப்படி இதில் இருந்து வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.  

விமல் கோபாலகிருஷ்ணன் மற்றும் அபினவ் சுந்தர் நாயக் இருவரும் சேர்ந்து இந்த கதையை எழுதி உள்ளனர். சட்டங்களை பற்றி மிகப்பெரிய ரிசர்ச் ஒர்க் தேவைப்படும் இந்த கதையை கச்சிதமாக எழுதி உள்ளனர். ஆரம்பம் முதல் கடைசி வரை வினித் கதாபாத்திரம் தனக்குள் பேசி கொள்ளும் விதம், பிரச்சனைகளில் இருந்து சாதூர்யமாக வெளிவருவது என கச்சிதமாக எழுதி உள்ளனர். ஹீரோ கதாபாத்திரம் தனக்காக மற்றவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் செயலால் அவருடன் நம்மால் ஒன்றிணைய முடியவில்லை. மற்றபடி முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் ஒரு ஜாலி ரைட்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.