ரயில்வேயில் வேலை.. ஆசை காட்டி ரூ.72 லட்சம் அபேஸ்.. அரசுப் பள்ளி ஆசிரியர் கைது..!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6 பேரிடம் 72 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (49). கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி (53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிச்சாண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பிச்சாண்டி, “எனக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவேன்” என, சீனிவாசனிடம் கூறினார். அதை உண்மை என நம்பிய சீனிவாசன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 6 பேரிடம் இருந்து 72 லட்சம் ரூபாய் வாங்கி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிச்சாண்டியிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட பிச்சாண்டி, 6 பேருக்கும் போலியான ரயில்வே அடையாள அட்டையை தயார் செய்து கொடுத்தார். அதில் 3 பேருக்கு பெங்களூருவிலும், 3 பேருக்கு கொல்கத்தாவிலும் வேலை கிடைத்து இருப்பதாகவும், விரைவில் வேலைக்கான பணிநியமன ஆணை வரும் எனவும் கூறினார்.

ஆனால், பிச்சாண்டி சொன்னபடி 6 பேருக்கும் ரயில்வேயில் இருந்து வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், இதுபற்றி பிச்சாண்டியிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியரான பிச்சாண்டியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.