10 சதவீத இட ஒதுக்கீடு – மறு சீராய்வு மனு தாக்கல்… அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் கண்டன குரல்களை எழுப்பிவருகின்றனர். குறிப்பாக எந்த ஏழை மாதம் 62,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு பேரிடி விழுந்திருக்கிறது என குரல்கள் எழுந்திருக்கின்றன.  இந்தச் சூழலில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி, சின்னதுரை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சின்ராஜ் எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுகவும், பாஜகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப்பிரிவினையை கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும் நாங்கள் அதனை நிராகரிக்கிறோம். இதுகுறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாக பதிவு செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியையைும் வேலைவாய்ப்பையும் கொடுத்து, அனைத்திலும் முன்னேற்றுவதற்கு பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதி கொள்கை.

1920ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தை இரட்டை ஆட்சி முறைப்படி ஆட்சி செலுத்திய நீதிக்கட்சியானது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தது. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன்பிறகுதான், பள்ளிக் கல்லூரிக்குள் பெருமளவில் நுழைந்தார்கள். அப்படி கிடைத்த கல்வியின் மூலமாக வேலைவாய்ப்பை அடைந்தார்கள். இதற்கு வேட்டுவைக்கும் விதமாக, கம்யூன் அரசாணை என்பது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 1950ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரிவில், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்றுதான் வரையறையில் உள்ளது. அதேதான், அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரவேண்டும் என்பதுதான், இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், பொருளாதாரத்தை அளவுகோலாக புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. 

அதன்படி ஒரு சட்டத்தை 2019ஆம் ஆண்டு கொண்டுவந்தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளனர். சமூகத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கிறார்கள். இதனை விளக்கமாக நான் சொல்ல தேவையில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது” என பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.