இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி

இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி!

‘ஜி – 20’ மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேசினார். இது தொடர்பாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இந்திய – அமெரிக்க உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிரதான மற்றும் வளரும் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வரும் காலத்தில் அதிக ஒத்துழைப்பை பேண இரு தலைவர்களும் உறுதி ஏற்றனர்.

இந்திய – அமெரிக்க உறவு வலுப்பெற தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அதிபர் பைடனின் முயற்சிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு, இந்தியா தலைமை ஏற்று நடத்தும் ஜி — 20 மாநாட்டின் போதும் இதே ஒருங்கிணைப்பை இருநாடுகளும் அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக மோடி தெரிவித்தார். ‘குவாட்’ மற்றும் ‘ஐ2யு2’ அமைப்பில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சீன அதிபருடன் சந்திப்புபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நம் பிரதமரும், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கும் சந்தித்தபோது வெறுமனே கைகுலுக்கிக் கொண்டனர்.

‘வளர்ச்சிப் பாதையில் இந்தியா!’

இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:உலக நாடுகளுக்கு, 21ம் நுாற்றாண்டின் நம்பிக்கை கீற்றாக இந்தியா உள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த இந்தியாவுக்கும் அதன் பிறகான இந்தியாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக நாம் இருக்கிறோம்.நம் வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத அளவிலும், வேகத்திலும் உள்ளது. இந்தோனேஷியாவின் சவாலான காலத்தில் இந்தியா உறுதுணையாக இருந்துள்ளது. இரு நாடுகளும் மிக செழிப்பான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பகிர்ந்து கொள்கின்றன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘டிரம்ஸ்’ இசைத்த மோடி!

இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி வந்தபோது, அங்கு கூடியிருந்த அனைவரும் உற்சாக குரல் எழுப்பி பிரதமரை வரவேற்றனர். அரங்கில், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷம் அதிர்ந்தது. பிரதமரை வரவேற்கும் விதமாக, ‘டிரம்ஸ்’ இசைக்கப்பட்டது. அதன் ஒலியை கேட்டு உற்சாகம் அடைந்த பிரதமர் மோடி, சிறிது நேரம் டிரம்ஸ் கருவியை இசைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தேடிச் சென்று கை கொடுத்த பைடன்!

‘ஜி – 20’ மாநாட்டு மேடையில் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வேகமாக அவரை நோக்கி வந்தார். முதலில் இதை கவனிக்காமல் திரும்பிய மோடி, சட்டென பைடனை பார்த்ததும் சிரித்தபடி அவருடன் கை குலுக்கினார். பின், இருவரும் இருக்கையில் அமர சென்றனர். அப்போது, பைடனை அழைத்து மோடி ஏதோ சொல்ல, அவர் வாய்விட்டு சிரித்தார். இந்த காட்சிகளை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பின்னால் இருந்து கவனித்தபடி இருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.